கோவிட்-19 தொற்றுநோயால் விமான நிறுவனங்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கின்றன என்று பிரதமர் துறை பொருளாதார அமைச்சர் முஸ்தபா முகமது தெரிவித்தார்.
இது ஒரு உலகளாவிய நிகழ்வு ஆகும். எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற மாபெரும் விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மலேசியா ஏர்லைன்ஸ் கோவிட்-19 பாதிப்பிற்கு முன்பே பல்வேறு சவால்களை எதிர்கொண்டது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த பொருளாதார தூண்டுதல் தொகுப்பில் (Prihatin Rakyat Economic Stimulus Package) விமானங்களுக்கு உதவி வழங்குவதில் எந்த அறிவிப்பும் இல்லை என்றாலும், இந்தத் துறைக்கு உதவி நடவடிக்கைகள் தேவைப்படும் என்று அவர் கூறினார்.
“மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் போன்ற நிறுவனங்கள் கூட பெரிய முதலாளிகள். நிச்சயமாக அதற்கு வேறு மாற்று செயல் திட்ட நடவடிக்கை தேவை” என்று முஸ்தபா கூறினார்.
இருப்பினும், மலேசிய விமான நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் எடுக்கும் நேரம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை.
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக மலேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் செயல்படுவதற்கான அனைத்து சர்வதேச விமானங்களையும் ஏர் ஏசியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஏர் ஏசியா மலேசியாவும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 21, 2020 வரை அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மார்ச் 18 முதல் 31 வரை நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் காரணமாக தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸும் அதன் ஒட்டுமொத்த இயக்கத்தை கணிசமாகக் குறைத்துள்ளது.