திரு. முரளி தலைமையிலான ‘தமிழன் உதவும் கரங்கள்’ இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோவிட்-19 நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவால் பாதிப்புள்ளாகியிருக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு இலவச உதவிப் பொருட்களை வழங்கினர். நேற்று, 29.03.2020, ஷா ஆலம், சன்வே, டேசா மென்தாரி, கிள்ளான் உட்பட 7 இடங்களில் இந்த உதவிப் பொருட்களை ‘தமிழன் உதவும் கரங்கள்’ இயக்கத்தினர் வழங்கினர்.
“டயாலிசிஸ் செய்ய மருத்துவமனை செல்லும் வயதானவர்கள் இந்த நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவால் கிராப் (Grab) மற்றும் வாடகை வண்டி (டாக்சி) சேவைகள் கிடைக்காமல் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்களின் நிலையும் இதுவே. தனியாக இருக்கும் சிலருக்கு இந்த செய்தியே சரியாக சென்றடையவில்லை” என்பதையும் அவர் தெரிவித்தார்.
இவர்களின் இந்த துன்பங்களை கருத்தில் கொண்டு அரசு நிர்வாகம் இவர்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என திரு. முரளி கேட்டுக் கொண்டார்.
உதவும் கரங்கள் இயக்கத்தை தொடர்பு கொண்டு பலர் இத்தகைய உதவிகளை நாடி வருகின்றனர். இருப்பினும் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் அரசு மட்டுமே இவர்களுக்கு உடனடியாகவும் சரியாகவும் உதவ முடியும் என அவர் தெரிவித்தார்.
‘தமிழன் உதவும் கரங்களின்’ இந்த உதவிப் பொருட்கள் வழங்கும் பணி இன்றுடன் (30.03.2020) இந்த பகுதிகளில் நிறைவடைகிறது என்பதையும் அவர் தெரிவித்தார்.