கோவிட்-19 நெருக்கடியைக் கையாள்வதில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு RM100,000 வழங்க பிரதமர் முகிதீன் யாசின் ஒப்புக் கொண்டதாக சுபாங் எம்.பி. வோங் சென் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கம் முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வருடாந்திர ஒதுக்கீட்டைக் வெட்டியது. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த போதும் இந்த கொள்கையையே பின்பற்றியது.
“கோவிட்-19 நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் RM100,000 தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளது” என்று வோங் சென் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
மத்திய அரசு நிதியுதவி செய்யக்கூடிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டு உறுதிப்படுத்தும் மின்னஞ்சலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
உதவிகளை விநியோகிக்க சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதற்காக தனது அதிகாரிகளைச் சந்திப்பதாகவும், தனது பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சமூகத் தலைவர்களையும் ஈடுபடுத்துவதாகவும் வோங் கூறினார்.
“நாங்கள் அவற்றை எப்படி செலவிடுகிறோம் என்பதற்கான அரசாங்க விதிமுறைகளையும் பின்பற்றுவோம். அதன் செயல்முறை மற்றும் நடைமுறைகளைப் பார்ப்போம்,” என்று அவர் கூறினார்.