நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா?

கொரோனா வைரஸ் | ஏப்ரல் 14க்குப் பிறகு அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பது மக்கள் ஒழுக்கத்தைப் பொறுத்தே உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் கூறுகிறார்.

டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க வேண்டும். இது அனைவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடித்தால் மட்டுமே செய்ய முடியும்.

“இது நமது முடிவில் தான் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, கட்டுப்பட்டு, வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவை கடைபிடித்தால் இது சாத்தியமாகும். அதே நேரத்தில் சுகாதார அமைச்சில் நாங்கள் பொது சுகாதார நடவடிக்கைகளைத் தொடர்கிறோம், பாதிப்பு மற்றும் பரவல் கண்டறிதலை முறையாக மேற்கொள்கிறோம்”.

“நாங்கள் சோதனைகளை அதிகரிக்க முடியும்; இலக்கு குழுக்களைக் கண்டுபிடிப்பதை அதிகரிக்க முடியும். நாங்கள் அவர்களை சோதித்து ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்துகிறோம்”.

“இதனால் கோவிட்-19 இன் சங்கிலியை உடைக்க முடியும். எனவே அடுத்த இரண்டு வாரங்கள் இப்போது உங்கள் கையிலும், எங்கள் கையிலும் உள்ளது. நாம் அனைவரும் சமூக ஒழுக்கத்தைக் கொண்டிருக்க முடிந்தால், பாதிப்பைக் குறைக்கலாம் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் நீடிக்க வேண்டிய அவசியத்தை சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே எதிர்பார்க்கிறதா என்ற கேள்விக்கு நூர் ஹிஷாம் பதிலளித்தார். இது இப்போது ஏப்ரல் 14 வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் ஆரம்பத்தில் நாளை (மார்ச் 31) முடிவடைய திட்டமிடப்பட்டது.