கோவிட்-19: 17 பாதிப்புகளுக்குப் பிறகு City One அடுக்குமாடி குடியிருப்பு பூட்டப்பட்டது

கோலாலம்பூரில் உள்ள மெனாரா சிட்டி ஒன் (Menara City One) 17 கோவிட்-19 பாதிப்புகளைப் பதிவு செய்த பின்னர் பூட்டப்பட்ட நிலையில் (lockdown) வைக்கப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மூன்றாவது மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (Enhanced movement control order (Emco) ஆகும்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சராக இருக்கும் பாதுகாப்பு மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப், இதில் 502 குடியிருப்பு பிரிவுகளில் 3,200 குடியிருப்பாளர்களும், அக்காண்டோமினியத்தில் உள்ள 49 கடைகளும் அடங்கும் என்றார்.

“எம்கோவின் நோக்கம் இப்பகுதியில் இருந்து கோவிட்-19 பரவாமல் தடுப்பதாகும்” என்று அவர் ஒரு அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 13 நள்ளிரவு வரை எம்கோ நடைமுறையில் இருக்கும் என்றார்.

ஒரு குறிப்பிட்ட கட்டிடத்திற்கு ‘எம்கோ’ பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. ஒரு நகர்ப்புறத்தில் இதுபோன்ற எம்கோ பயன்படுத்தப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

முந்தைய இரண்டு ‘எம்கோ’ உத்தரவு, மார்ச் 27 அன்று சிம்பாங் ரெங்காம், குளுவாங்கில் உள்ள இரண்டு கிராமங்களிலும், ஹூலு லங்காட்டில் உள்ள ஏழு கிராமங்களிலும் நேற்று கோவிட்-19 வழக்குகள் அதிகரித்ததனால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மூன்றாவது ‘எம்கோ’ முந்தைய உத்தரவுகளிலிருந்து சற்று வேறுபடுகிறது. அந்த சொகுசு அடுக்குமாடி கட்டட வளாகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விற்கும் வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த சேவை நடைவெளி பாதையில் (லாபியில்) வழங்கப்படும்.

இந்த உத்தரவின் கீழ், குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறவில்லை. மாறாக அவர்கள் அந்த சொகுசு அடுக்குமாடி கட்டடத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

முந்தைய ‘எம்கோ’ அனைத்து கடைகளையும் மூட வேண்டும் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்காததால் சமூக நலத்துறையால் உணவு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.

அக்காண்டோமினியத்தில் மருத்துவத் தளம் அமைக்கப்படும் என்றும், கோவிட்-19 சோதனை ஒவ்வொரு வீட்டிலும் (யூனிட்-யூனிட்டாக) நடத்தப்படும் என்றும் இஸ்மாயில் கூறினார்.

இந்த வளாகத்தை போலிஸ், ராணுவம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் ரேலா பணியாளர்கள் கண்காணித்து பாதுகாப்பார்கள் என்றார்.

“அனைத்து குடியிருப்பாளர்களும் அமைதியாக இருக்கும் படியும், அவர்களின் முழு ஒத்துழைப்பை சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு உடன்படவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த காண்டோமினியம் 1997இல் கட்டப்பட்டது. இதில் வெளிநாட்டினர் கணிசமான எண்ணிக்கையிலான குடியிருக்கிறார்கள்.

மலேசியாவின் பிற பகுதிகளுக்கு, வழக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) பொருந்தும்.

வழக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் சேவைகள் மட்டுமே மூடப்பட வேண்டும்.

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், ஆனால் உணவு பொருள்களை வாங்க அல்லது மருந்துகளைத் பெற குறுகிய பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

இன்று நண்பகல் வரை, மலேசியாவில் 2,626 கோவிட்-19 பாதிப்புகளும் 37 இறப்புகளும் பதிவாகியுள்ளன.