கெடாவில் குப்பை அகற்றல் 10 சதவீதம் குறைந்தது

அலோர் செடார், மார்ச் 31 – மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதிலிருந்து, கெடாவில் குப்பைகளை அகற்றுவது சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது என்று கெடா தொழில் மற்றும் முதலீடு, உள்ளூராட்சி மற்றும் வீட்டுக் குழுத் தலைவர் டான் கோக் யூ கூறினார்.

இதற்கு முன்னர், மாநிலத்தில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 1,500 டன், ஆனால் இப்போது அது ஒரு நாளைக்கு 1,300 டன் மட்டுமே என்றும், மேலும் இந்த எண்ணிக்கை ஏப்ரல் 14 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முடியும் வரை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

“உதாரணமாக, முன்பு அலோர் செட்டாரில், ஒவ்வொரு நாளும் 270 டன் குப்பைகள் வெளியேற்றப்பட்டன, ஆனால் இப்போது அந்த அளவு ஒரு நாளைக்கு 243 டன்னாகக் குறைந்துவிட்டது, எனவே பொதுமக்கள் இதைத் தொடர்வார்கள், குறிப்பாக உணவை வீணாக்குவதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தை கழிவுகளை ஒழுங்காகக் குறைத்து நிர்வகிக்கும் பழக்கமாக மாற்ற பயன்படுத்துமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தூய்மையைப் பேணுவதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது குப்பை எடுக்கும் சேவைகள் வழக்கம் போல் தொடரப்படுகின்றன,” என்று அவர் இன்று இங்கு COVID-19 பொது துப்புரவு நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அலோர் செடார் நகர சபை இங்குள்ள சந்தைகளின் நுழைவாயில்களில் வாஷ் பேசின்கள் மற்றும் கை கழுவும் திரவங்களை ஏற்பாடு செய்துள்ளது.

“உள்ளூர் அதிகாரிகள் உடல் வெப்பநிலை சோதனை மற்றும் சந்தைகளில் கூடல் இடைவெளியை பராமரிப்பது உள்ளிட்ட பிற தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இருப்பினும், மிக முக்கியமானது என்னவென்றால், மக்கள் சுகாதாரத்தை கடைப்பிடிப்பதில் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா