ஹரி ராயா கொண்டாட விரும்பினால் MCOஐ கடைபிடிக்கவும் – இஸ்மாயில் சப்ரி

கொரோனா வைரஸ் | ரமலானுக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. ஹரி ராயா மே மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மூன்றாவது அல்லது நான்காவது முறையாக நீட்டிக்கப்படாமல் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“இந்த இரண்டாவது MCO மூன்றாவது அல்லது நான்காவது கட்டமாக நீட்டிக்கப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ரமலான் மாதத்தில் MCO இன்னும் செயல்படுத்தப்படுமா, ஹரி ராயாவைக் கொண்டாட முடியுமா என்று பல வினாக்கள். வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.

“மூன்றாவது அல்லது நான்காவது MCO இருக்காது என்பதை உறுதிப்படுத்தக்கூடியவர்கள், ஹரி ராயாவை வழக்கம் போல் கொண்டாட முடியும் என்று நிர்ணயிக்கக்கூடியவர்கள், நீங்கள் தான் மக்களே” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நீட்டிக்கப்பட்ட MCO காலம் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஏப்ரல் 23 ஆம் தேதி ரமலான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குப் பிறகு மே 23 ஆம் தேதி ஹரி ராயா கொண்டாடப்படும்.

இருப்பினும், நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றால் MCO தொடரலாம்.

இந்த ஆண்டுக்கான ரமலான் பஜார்களை மலாக்கா, நெகேரி செம்பிலன் மற்றும் திரெங்கானு ஏற்கனவே ரத்து செய்துள்ளன.

நேற்றைய நிலவரப்படி, MCOஐ மீறியதற்காக 742 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தெரிவித்தார். அதற்கு முந்தைய நாள் 828.