சுலாவேசியில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 87 பங்கேட்பாளர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்

மார்ச் 19 அன்று இந்தோனேசியாவின் சுலாவேசியில் நடந்த ஒரு தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 87 மலேசியர்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருவதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“சுலாவேசி குழுவில், அடையாளம் காணப்பட்ட 87 பெயர்கள் உள்ளன. அவற்றை காவல்துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று நூர் ஹிஷாம் புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சக தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக,சுலாவேசியில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் மலேசியர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் விதிக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்தது.

இந்த மாநாட்டை இந்தோனேசிய அரசாங்கம் ரத்து செய்து விட்டது. இருப்பினும், அது ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாகவே பல பங்கேற்பாளர்கள் அங்கு சென்று விட்டனர்.

107 மலேசியர்கள் சுலாவேசியிலிருந்து திரும்பி வருவதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இன்று நடந்த அதே செய்தியாளர் கூட்டத்தில், கோலாலம்பூரின் மெனாரா சிட்டி ஒன்னின் (Menara City One) நிலைமையை பற்றியும் நூர் ஹிஷாம் பேசினார். அவ்வளாகத்தில் 17 பாதிப்புகள் கண்டறியப்பட்ட பின்னர் இப்போது கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் உள்ளது.

வளாகத்தின் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் MoH சோதனைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

“இதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் அந்த பகுதியில் ஒவ்வொரு குடியிருப்பையும் சோதிப்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் நேற்று இரவே தொடங்கி விட்டோம்” என்று அவர் கூறினார்.

அதோடு, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.

மலேசியாவில் 364 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது என்றார்.