“அமைச்சின் பதிவு, பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவத்திற்கு எதிரானது” – தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள் சீற்றம்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மனைவிமார்கள் மற்றும் வீட்டிலிருந்து பணி புரியும் பெண்களுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கிய பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை மற்றும் பொதுநலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு அமைச்சகம் உதவு வேண்டும் என்றும், பெண்களின் குரல் தொனி மற்றும் தோற்றத்தில் கவனம் செலுத்துவதை முக்கியமாக கருதத் தேவையில்லை என்றும் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

மகளிர் நிவாரண அமைப்பின் (WAO) நிர்வாக இயக்குநர் சுமித்ரா விஸ்வநாதன், நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் நாளிலிருந்து, பல பெண்கள் குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பைப் பெற அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்தார்.

“குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு இருப்பதை அமைச்சர் ரினா ஹாருன் உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்காக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றும் கூறினார்.

இன்னுமும் தோற்றத்தைப் பற்றி பேசுவதை விட, பெண்களைப் பாதுகாப்பதை அவர்கள் அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ரினா மற்றும் அவரது துணைத் தலைவர் சிடத்தி ஜைலா முகமட் யூசோப் மலேசிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் அறியாமையில் இருக்கின்றனர் என்றும் விமர்சித்தார்முன்னாள் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ.

“நெருக்கடி காலங்களில், அரசாங்க நிறுவனங்களை வழிநடத்த அரசியல் தலைமை அவசியம்”.

“பல குடும்பங்களுக்கு தினசரி உணவைப் பெறுவது கூட கடினமாக உள்ளது. இப்படி இருக்க, துணி மற்றும் அழகு சாதனங்களுக்கு செலவழிக்க ஏது பணம்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பெண்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைச்சு செயல்பட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா எம்.பி. மரியா சின் அப்துல்லா கூறினார்.

“அமைச்சினால் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் தற்போது உள்ளன. எடுத்துக்காட்டாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு விநியோகிப்பதை அரசாங்கம் தடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் பேல இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன.

“இந்த பிரச்சினையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் குழந்தைகள், முதியவர்கள், வீடற்றவர்கள் மற்றும் ஊனமுற்றோர் உட்பட பெரும்பாலான ஏழைக் குடும்பங்கள் பட்டினி கிடக்கின்றன, அவர்களுக்கு உதவி தேவை”.

“தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடுமையான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து உணவு விநியோகிக்க உதவும் வகையில் இப்போது சிறந்த வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்பட வேண்டும் – இது அமைச்சின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உணவு விநியோகமும், பெண்கள் மற்றும் குடும்ப அமைச்சின் கீழ் உள்ள ஒரு பிரிவான சமூக நலத் துறையால் கையாளப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

நேற்று பதிவிடப்பட்ட தொடர் இன்ஸ்டாகிராம் இடுகைகளில், மனைவிமார்கள் தங்கள் கணவர்களுடன் சண்டையிட வேண்டாம் என்று அமைச்சு அறிவுறுத்தியது. அதற்கு பதிலாக கார்ட்டூன் கதாபாத்திரமான டோரமனின் குரலைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கைத் துணையை வீட்டு வேலைகளுக்கு உதவ ஊக்குவிக்க மனைவிகளுக்கு அமைச்சால் அறிவுரை வழங்கப்பட்டது.

இருப்பினும் அந்த இடுகை பின்னர் நீக்கப்பட்டது.

மற்றொரு இடுகையில், வீட்டில் இருந்து பணிபுரியும் தாய்மார்கள் முக ஒப்பனைகளை செய்து கொள்ள வழியுறுத்தப்பட்டது. இதனால் தங்கள் கவனம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும் என்று அமைச்சு முன்மொழிந்தது. குடும்ப உறுப்பினர்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு பெண்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டாம் என்றும் அமைச்சு எச்சரித்தது.

பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஓத்மான் சைட், இதுபோன்ற அறிவுரைகள் பாலின பாகுபாடு மற்றும் தவறான கருத்துக்களுக்குப் பின்னால் உள்ள களங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும், குறிப்பாக இது போன்ற கருத்துகள் பெண்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட அமைச்சகங்களிடமிருந்து வரும்போது அது மோசமானது என்றும் கூறினார்.

“அமைச்சின் பதிவு, பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவத்திற்கு எதிரானது என்பது ஏமாற்றமளிக்கிறது” என்று அந்த அம்னோ உறுப்பினர் கூறினார்.