ஏழைகளுக்கான உணவு விநியோகத்தில் இருக்கும் அரசியல் நோக்கம்  அவமானதிற்குறியது

இராகவன் கருப்பையா- கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் நிறைய பேர் வருமானமின்றி தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளிக்கின்றனர்.

குறைந்த வருமானமுடையோர், குறிப்பாக பி40 தரப்பினர், சில்லறை வியாபாரிகள், அன்றாட ஊதியம் பெறுவோர், ஆதரவற்ற முதியோர், அங்கவீனர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த சூழலில் சற்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய நிலையில் அரசு சாரா இயக்கங்களும், தனியார் நிறுவனங்களும் உணவகங்களும் ஹோட்டல்களும் தனிப்பட்டவர்களும் கூட இத்தகையோருக்கு முடிந்த அளவுக்கு உதவி வருவது பாராட்டுக்குரியது.

ஆனால் இதுபோன்ற நேரடி உதவி நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு 2 நாட்களுக்கு முன் எல்லாத் தரப்பினரையும் அரசாங்கம் அதிரடியாக பணித்தது பலருக்கு அதிருப்தியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார பாதுகாப்பு கருதியும் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு நியாயமான ஒன்றுதான்.

இருந்த போதிலும் இந்த திடீர் உத்தரவானது, பொது நலம் கருதி இரவு பகல் பாராமல் ஏழை எளியோருக்கு உதவிவந்த ஆயிரக்கணக்கான தொண்டூழியர்களின் உற்சாகத்தை குழைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

உதவி செய்ய விரும்புவோர் சமூக நல இலாகாவிடம் அந்த உணவுப் பொருட்களை வழங்கவேண்டும் என்றும் போலீஸ், ரேலா மற்றும் ராணுவ உறுப்பினர்களைக் கொண்டு அப்பொருட்கள் பட்டுவாடா செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்மையிலேயே அவசரமாக உதவி தேவைப்படுவோருக்கு சமூக நல இலாகாவிலிருந்து உடனுக்குடன் உதவிகள் சென்று சேருமா அல்லது தாமதம் ஏற்படுமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் அரசாங்கத்தால் இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை நாடளாவிய நிலையில் ஒருசேர அமல்படுத்துவற்கான வசதிகளும் ஆள்பலமும் இல்லை என்று நம்பப் படுகிறது.

ஆக பணமின்றி உணவின்றி அவதிப்படும் மக்களை அடையாளம் கண்டு எவ்வித பாரபட்சமுமின்றி அவர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்வதில் அந்த இலாகாவுக்கு சிக்கல்தான்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட ஒரு நடைமுறையை அமல்படுத்தி, ஏழைகளுக்கான இந்த உணவு விநியோக நடவடிக்கைகளை அரசாங்கம் தனிப்பட்டவர்களிடமே விட்டுவிடுவது விவேகமான முடிவாக இருக்கும்.

அவ்வாறு செய்தால் அரசாங்கத்திற்கும் வேலை பளு சற்று குறைந்த மாதிரி தானே!

இதற்கிடையே சில அரசியல்வாதிகள் இந்த உணவுப் பொருட்கள் அடைக்கப்படுள்ள பைகளின் மீது தங்களுடைய பெயரையும் படத்தையும் அச்சிட்டு சுய விளம்பரம் தேட முற்பட்டுள்ளனர். இது அவமானதிற்குறியது.

இந்த கொடிய நோய்க்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது அரசியல்வாதிகள் சிலரோ இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது உண்மையிலேயே கேவலமாகத்தான் உள்ளது.

எது எப்படியாயினும் நம் நாட்டில் பசிக்கொடுமையால் பரிதாபமாக மாண்டனர் என்ற சோகச் செய்தி ஒருபோதும் வரவேக்கூடாது. அப்படியேதும் நேர்ந்தால் அரசாங்கம் உள்பட நாம் அனைவருமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.