தனிப்பட்ட சுகாதாரம், வீடு மற்றும் வாகனம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – நூர் ஹிஷாம்

கோவிட்-19 நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளையும் வாகனங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான கடமை அவரவருக்கு மட்டுமே உள்ளது என்றும் அதை மற்றவர்கள் செய்ய முடியாத ஒரு பணியாகும் என்றும் தலைமை சுகாதார இயக்குனர் கூறினார்.

“கிருமி ஏற்கனவே நம் சமூகத்தில் உள்ளது. அது எங்கும் இருக்கலாம். எனவே வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்”.

“இது உங்கள் வீட்டிற்கு வெளியேயும் மறைந்து இருக்கக் கூடும். எனவே வீட்டிலேயே இருங்கள், உங்கள் வீடு மற்றும் காரை சுத்தம் செய்யுங்கள்” என்று இன்று பிற்பகல் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

கோலாலம்பூர் பாங்சாரில் உள்ள ஒரு செய்தித்தாள் நிறுவனத்தின் தலைமையகம் உட்பட, தனியார் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட கிருமிநாசினி நடவடிக்கைகளை உறுதிப்படுத்த மலேசியாகினி நூர் ஹிஷாமைத் தொடர்பு கொண்டது.

நூர் ஹிஷாம் அந்நடவடிக்கை குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால் கோவிட்-19இன் ஆபத்தை வலியுறுத்தினார். மேலும் பொதுமக்களை சுத்தமாக இருக்குமாறு எச்சரித்தார்.

வெளியே சென்று வருபவர்கள் காலணிகளிலோ அல்லது ஆடைகளிலோ வீட்டிற்கு என்ன கொண்டு வருகிறார்கள் என்று தெரியாது என்றும், அவர்கள் கிருமியை வீட்டிற்கு கொண்டு வரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“நகராட்சி அல்லது வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சு உங்கள் வீட்டை சுத்தம் செய்யும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாம் நம்மை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், அதை வேறு யார் செய்ய முடியும்?” அவர் கூறினார்.

மதியம் நிலவரப்படி, மலேசியாவில் கோவிட்-19 காரணமாக 43 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,766 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 537 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 94 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர், இதில் 60 பேர் சுவாச உதவிகளை நம்ப வேண்டியுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதித்துள்ளது.

ஆரம்பத்தில் மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை இரண்டு வாரங்களுக்கு நடைமுறையில் இருந்து, பின்னர் ஏப்ரல் 14 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.