கொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர்.

மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் குறித்து போதிக்க மெளலான மௌதுதி தலைமையில் 1941ஆம் ஆண்டு ஜமாத்-இ -இஸ்லாமி அமைப்பு தொடங்கப்பட்டது.

அதற்கு 15 வருடங்களுக்கு முன்பு மற்றொரு முக்கிய இஸ்லாமிய அறிஞரான மெளலானா முகமது இலியாஸ் கந்த்லாவி, 1926ஆம் ஆண்டு இந்தியாவின் மேவாத் பகுதியில் (டெல்லியிலிருந்து சிறிது தூரம்), தப்லிக் ஜமாத் என்னும் அமைப்பை தொடங்கியிருந்தார்.

பிரிக்கப்படாத இந்திய துணை கண்டத்தில் இந்த இரு அமைப்புகளும் தொடர்ந்து செயலாற்றின. அதன்பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உருவான பிறகு அங்கும் செயலாற்ற தொடங்கின.

தப்லிக் ஜமாத் – ஒரு சர்வதேச மத இயக்கம்

இந்தோனீசியா, மலேசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் தற்போது தப்லிக் ஜமாத் பரவியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வலுவாக செயலாற்றி வருகிறது.

ஜமாத்திற்கு ஒவ்வொரு நாட்டிலும் தலைமையகங்கள் உள்ளன. ஆனால் ஆன்மிக மையமாக டெல்லியில் உள்ள ‘மர்காஸ்’ உள்ளது. டெல்லியில் அதிகமான முஸ்லிம் மக்கள் வசிக்கும் நிஜாமுதீன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அது அமைந்துள்ளது. மர்காஸில் மசூதியும், 5000 பேர் வரை தங்கும் அளவிற்கு இடவசதியும் உண்டு.

வங்கதேச நிகழ்வு

வங்கதேச தலைநகர் தாக்காவில் ‘பிஸ்வா இஜ்டெமா’ எனப்படும் ஆண்டு கூட்டம் நடைபெறும். இது தப்லிக் ஜமாத்தால் ஒருங்கிணைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

மெக்கா புனித யாத்திரைக்கு பிறகு அதிக அளவில் முஸ்லிம்கள் கூடும் கூட்டமாக இது உள்ளது. இது வங்கதேசத்தில் நடைபெறும் ஒரு பெரிய நிகழ்ச்சி, மேலும் உலகிலுள்ள பெரும்பாலான முஸ்லிம்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

இந்த கூட்டத்தில் ஒருமுறை பங்கு கொண்ட ஐதராபாத்தை சேர்ந்த ஜீஷன் அலி, “மெக்காவிற்கு பிறகு பெரிய அளவில் முஸ்லிம் மக்கள் வேறெங்கும் கூடுவதில்லை. அந்த கூட்டம் அந்த நிகழ்வு அவ்வளவு அருமையாக இருக்கும்.” என்கிறார்.

தப்லிக் ஜமாத்தின் செயல்பாடுகள்

ஜமாத்தின் நிறுவனர் முகமது இல்யாஸ் ஒருமுறை, “இஸ்லாமியர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இந்த அமைப்பு முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிற்குள் கொண்டுவர முயற்சிப்பதில்லை. முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமை கற்பிக்கிறார்கள்.

தப்லிக் ஜமாத்தின் உறுப்பினர்கள், இது அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்கின்றனர். இது அடிமட்டத்தில் உலக முழுக்க இருக்கும் முஸ்லிம்களுக்கு இடையே பணிபுரிகிறது என்கின்றனர்.

மேலும் குரானின் போதனைகள்படி ஓர் இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதும், நபிகளின் போதைகளின்படி நடந்து கொள்வதும்தான் இவர்களின் நோக்கம் என்றும் கூறுகின்றனர்.

இஸ்லாமியரகள் இருக்கும் இடங்களுக்கு விருந்தினர்களை 40 நாட்களுக்கோ அல்லது அதற்கு குறைவான நாட்களுக்கோ இந்த ஜமாத் அனுப்பும். போதகர்கள் ஒவ்வொரு நபர்களையும் நேரடியாக பார்த்து பேசுவதே பலனளிக்கும் என்று நம்புகின்றனர். மேலும், வீடு வீடாக சென்று முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த செய்திகளை வழங்குவர்.

ஜமாத்தை பின்பற்றும் புகழ்பெற்ற நபர்களும் அதன் உறுப்பினர்களும்

இந்த நூற்றாண்டின் தொடக்க வருடங்களில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த ஜமாத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானின் கிரிக்கெட்டைக் காட்டிலும் தப்லிக் ஜமாத்தை அதிகம் பிரபலப்படுத்துபவர்களாகவே உள்ளனர் என்றும் சில பேச்சுக்கள் உண்டு.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடியவர்கள், இந்த ஜமாத்தில் சேர்ந்துள்ளனர். இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், ஷாஹித் அப்ரிடி, முஷ்டாக் அகமது மற்றும் முகமது யூசஃப் ஆகியோர் அதில் அடங்குவர்.

இந்த ஜமாத்தின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு யூசஃப் இஸ்லாமை பின்பற்ற தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் வீரரான ஹாஷிம் ஆம்லாவும் இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்.

அரசியல் துறையில், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பரூக் லெகாரி மற்றும் முகமது ரபிக் தரார் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனும் இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சியாவூர் ரகுமான் தப்லிக் ஜமாத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

டெல்லி நிஜாமுதீன்மர்காஸ் நிகழ்ச்சி செய்தியில் இடம்பிடித்துள்ளது ஏன்?

இந்த அமைப்பின் போதனை செயல்பாடுகளின் இருப்பிடமாக இருக்கும் இந்த மர்காஸ் தற்போது செய்திகளில் இடம் பிடித்ததற்கு காரணம், இந்த அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு மத கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மார்ச் 24 அன்று இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பு இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக இதில் கலந்து கொண்ட வசீம் அகமது தெரிவிக்கிறார்.

இவர் நிஜாமுதீன் பகுதியில் வசிப்பவர். ஆனால் வெளிநாட்டினர் உட்பட இதில் கலந்து கொண்டவர்கள் சிலர் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் இல்லாததால் அங்கேயே தங்கிவிட்டனர்.


டெல்லி நிஜாமுதீனில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்துகொண்ட 1800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக இந்த அமைப்பை பின்பற்றுபவரும், மர்காஸுக்கு அடிக்கடி சென்று வருபவருமான சாஃபர் சரேஷ்வாலா, “வருடத்தின் எந்த சமயத்திலும் மர்காஸில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பார்கள் அதில் வெளிநாட்டினரும் அடக்கம்,” என்கிறார்.
மார்ச் 3ஆம் தேதி இந்த அமைப்பின் ஆண்டு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அது எப்போது நிறைவு பெற்றது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் மார்ச் 17 தேதி அது முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தோனீசியா மற்றும் மலேசியா நாட்டினர் உட்பட 250 வெளிநாட்டவர் அங்கேயே தங்கிவிட்டனர்.

இந்த கூட்டம் நீண்ட நாட்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார் சாஃபர் சரேஷ்வாலா. ஆனால் இதற்கான விருந்தினர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருப்பதால் அது சாத்தியமாகவில்லை என்கிறார் வசீம் அகமது.

BBC.TAMIL