ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய நேரம் காலை 10 மணி வரை 9,37,170-ஆக உள்ளது.
எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.
உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம்.
அமெரிக்கா 215,417
இத்தாலி 110,574
ஸ்பெயின் 104,118
சீனா 82,381
ஜெர்மனி 77,981
பிரான்ஸ் 57,763
இரான் 47,593
பிரிட்டன் 29,865
சுவிட்ஸர்லாந்து 17,768
துருக்கி 15,679
ஆதாரம் – ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
உலகளவில் சமீபத்திய நிலவரங்கள் என்ன?
நெதர்லாந்தில் மேலும் புதிதாக 134 பேர் உயிரழந்திருக்க, அங்கு உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1,175ஆக உள்ளது. எனினும், மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹஜ் புனித யாத்திரையாக மெக்கா மற்றும் மதீனா செல்வோர் தங்களது முன்பதிவுகளை தற்போது செய்யாமல், சற்று தாமதமாக்கும்படி முஸ்லிம் மக்களை செளதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் தற்போது வரை 488 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,777ஆக உள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 24 பேர் இறந்துள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மருத்துவ உபகரணங்களின் தரம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதன் தரத்தை உறுதிபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறதாக சீனா தெரிவித்துள்ளது.
தேசிய நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் கடன் நிவாரணத்திற்காக 100 பில்லியன் டாலர்ளை, அவசர நிதியாக ஆப்பிரிக்க நித அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் என்ன நிலை?
ஆஸ்திரேலியாவில் நேற்று மட்டும் 300 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஊடரங்கு உத்தரவானது, அடுத்த 90 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு கடும் அபராதங்களை அந்நாட்டு அரசு விதித்து வருகிறது.
இந்நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் இனோவியோ மருந்து நிறுவனம் ஆகியவை தனித்தனியே உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை ஆஸ்திரேலியா சோதிக்க தொடங்கியுள்ளது.
இதே போல பல நாடுகள் கொரோனா தொடர்பான தடுப்பு மருந்துகளை சோதித்து வந்தாலும், முழுமையான மருந்தை உருவாக்க இன்னும் காலம் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
பெரும் அச்சுறுத்தலில் மியான்மர்
நம்மில் பெரும்பாலானோரும் அரசாங்க விதிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்து வருகிறோம். வீட்டிலேயே தங்குவது, சமூக விலகலை கடைபிடிப்பது மற்றும் நல்ல சுகாதார முறையை பின்பற்றுவது. அதாவது அடிக்கடி கைகளை கழுவுவது.
ஆனால், உலகில் உள்ள அனைவருக்கும் இது சாத்தியமாக இருப்பதில்லை.
குறிப்பாக மியான்மரில் உள்ள முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த மக்களுக்கு, சுத்தமான நீர் மற்றும் பிற அடிப்படை சேவைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது.
வகுப்புவாத வன்முறையால் மியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். அதில் பலரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஆவர்.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி அந்த முகாமில் ஒரு கழிவறையை 40 பேர் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்கிறது. அப்படி என்றால் அங்கு யாரேனும் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது வேகமாக பரவும்.
அங்கு சுமார் 3,50,000 மக்கள் பொது சுகாதார பேரழிவில் இருப்பதாக கூறப்படுகிறது.