பினாங்கில் உள்ள (College General) கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 24 மாணவர்கள் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (உள்ளூர் தொற்றுப் பகுதியில் நடவடிக்கைகள்) 2020, விதிமுறை 3(2)-ன் கீழ் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வாதங்களின் சமர்ப்பிப்பைக் கேட்டபின், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவர்களுக்கு கட்டாய வருகை உத்தரவை விதித்தது என்று கல்லூரி மாணவர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் சைமன் முரளி தெரிவித்தார்.
“இதன் பொருள், பரோல் அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் அம்மாணவர்கள் சமூக சேவையைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
மாஜிஸ்திரேட் ரோஸ்னி முகமட் ராட்ஜுவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கட்டாய வருகை உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மேலும் 24 மாணவர்கள் மூன்று மாதத்திற்கு வேலை நாட்களில் மூன்று மணி நேரம் சமூக சேவையை செய்ய வேண்டும் என்று சைமன் கூறினார்.
“அபராதம் அல்லது சிறை தண்டனை கிடையாது, ஆனால் சமூக பணி செய்ய வேண்டும்” என்று சைமன் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மார்ச் 18 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறையில் உள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, மலேசியாவில் மொத்தம் 2,908 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 2,218 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 645 பேர் குணப்படுத்தப்பட்டு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் இறந்துள்ளனர்.
தஞ்சாங் பூங்காவின் ஜாலான் செங்காயில் கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடியதன் மூலம் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காக அந்த 24 கல்லூரி மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி சோபியன் சாண்டோங், பொதுமக்களிடமிருந்து பெற்ற புகாருக்குப் பின்னர் இரவு 7.14 மணிக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.