MCO மீறல்: 4,000க்கும் மேற்பட்டோர் கைது, 1,000 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது

மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (MCO) மீறியதற்காக 4,189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் 1,449 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

“நேற்று, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக சாலைத் தடைகள் மற்றும் போலிஸ் ரோந்துகளின் போது 562 பேரை போலீசார் தடுத்து வைத்தனர்.

“இது கைதுகளின் எண்ணிக்கையில் 3.6 சதவீதம் குறைப்பைக் குறிக்கிறது. இந்த சரிவு உத்தரவுக்கு மக்கள் இணங்குவதைக் காட்டினால், அது ஒரு நல்ல விஷயம், அரசாங்கமும் அதை தான் எதிர்நோக்கியுள்ளது” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக மட்டுமல்லாமல், போலிஸ் உத்தரவுகளை மீறுவது போன்ற பிற குற்றங்களைச் செய்ததற்காகவும் தனிநபர்களுக்கு 8 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் உள்ளன என்று இஸ்மாயில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்கான அதிகபட்ச அபராதம் 6 மாத சிறைத்தண்டனை, அல்லது RM1,000 அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.

நேற்று 687 சாலைத் தடைகள் மற்றும் 380,342 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், மொத்தம் 3,791 வளாகங்கள் சோதனை செய்யப்பட்டு 23,256 அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியாதவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று இஸ்மாயில் கூறினார்.