இராகவன் கருப்பையா – கோவிட்-19 கொடிய நோய்க்கு எதிராக கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ ஊழியர்கள், போலீஸார் மற்றும் ராணுவத்தினர் மத்தியில் இரவும் பகலும் உழைக்கும் இன்னொருத் தரப்பினரையும் நாம் மறக்க இயலாது.
ஃபூட் பண்டா, க்ரேப் ஃபுட், லாலா மூவ், ஸூம், டாஹ் மக்கான், மெக்டோனல், கே.எஃப்.சி. போன்ற பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்து நாடு தழுவிய நிலையில் இலட்சக்கணக்கான இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சுறுசுறுப்பாக உணவு பட்டுவாடா செய்யும் இளைஞர்களின் சேவையை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நிறைய பேர் வெளியே சென்று சமையல் பொருள்களையோ உணவுகளையோ வாங்க இயவாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த உணவு விநியோகிப்பாளர்களின் சேவைகளுக்கான தேவை இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சாலைகளில் இதர வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 5 விழுக்காட்டுக்கு குறைந்துள்ள சூழலில், பச்சை, சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு முதலிய வண்ணங்களிலான உணவுப்பெட்டிகளை சுமந்து அங்குமிங்கும் மின்னல் வேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களைத்தான் தற்பொழுது அதிகமாக் காணமுடிகிறது.
அவர்களுடைய அளப்பரிய சேவையை கருத்தில் கொண்டு, சாலைத் தடுப்புகளில் கூட அவர்களுக்கு போலீஸ் கெடுபிடி கிடையாது.
அல்லும் பகலும் வெயில் மழை என்று பாராமல் உழைக்கும் இந்த இளைஞர்களில் பெண்களும் கூட உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் சுமார் பட்சம் தலா 30 வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்கின்றனர். இவர்களில் சிலர் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் வரையில் கூட வேலை செய்கிறார்கள்.
இதற்கிடையே தங்களுடைய நிறுவனங்களை பிரதிநிதிக்கும் உணவு விநியோகிப்பாளர்கள் முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து அவ்வப்போது கிருமி நாசினியையும் பயன்படுத்துகின்றனர் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள போதிலும், அத்தகைய சுகாதார நடைமுறைகளை அவர்கள் தொடர்ந்து அணுக்கமாக கடைபிடிப்பதை அந்நிறுவனங்கள் உறுதி செய்வது அவசியமாகும்.