அமைச்சர்: அருகில் மருத்துவமனை, கடைகள் இல்லையானால், 10 கி.மீ.-க்கு மேல் பயணம் செய்ய அனுமதி

வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் ஒருவரின் நடமாட்டத்தை முடக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ், விதிகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்கினார்.

சுற்றளவில் கடைகள் அல்லது மருத்துவ வசதிகள் இல்லையென்றால், மக்கள் 10 கி.மீ-க்கு மேல் வரை அருகிலுள்ள வசதிக்கு செல்லலாம் என்றார்.

“மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிலர் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக நேற்று கேள்விப்பட்டோம். ஆனால் அவ்வசதி 10 கி.மீ. தூரத்திற்கு அப்பால் இருந்ததால் அவர்கள் பயணங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது”.

“உடல்நலம் குறித்து கிளினிக்கிற்குச் செல்வது போன்ற சூழ்நிலை வரும்போது, காவல்துறையினர் 10 கி.மீ.க்கு மேல் வரையிலான பயணங்களை அனுமதிக்கலாம்” என்று அவர் கூறினார். மளிகை பொருட்களை வாங்கத் தேவைப்பட்டாலும் அப்படிச் செய்யலாம் என்றார்.

இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.