நாட்டில் தங்கள் மக்களின் நலனைப் பாதுகாப்பதில் வெளிநாட்டு தூதரகங்கள் பங்கு வகிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
தூதரகங்கள் அந்தந்த பிராந்திய பேரிடர் மேலாண்மைக் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்றும், உணவு பெறுவது போன்ற உதவிகளுக்கு அரசாங்கம் உதவும் என்றும் இஸ்மாயில் கூறினார்.
“ஒவ்வொரு வெளிநாட்டு தூதரகமும் தங்கள் குடிமக்களுக்கு தேவையான உதவியைப் பெறுவதை உறுதிசெய்யும் பொறுப்பு இருக்க வேண்டும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மலேசியாவில் பங்களாதேஷ் தொழிலாளர்களுக்கு உணவு இல்லாமல் போய்விட்டதாக வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி, மலேசியாவில் சுமார் 6 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர்.
அகதிகளுக்கும் உதவி கிடைக்குமா என்று கேட்டதற்கு, இஸ்மாயில் பதிலளித்தார்: “அகதிகளுக்கும் இதுவே பொருந்தும். உள்ளூர் மக்களாகினும் அல்லது வெளிநாட்டினரும் பட்டினி கிடப்பதை அரசாங்கம் அனுமதிக்காது” என்றார்.
அகதிகளையும் தூதரகம் கவனித்துக் கொள்ள வேண்டுமா, அல்லது அகதிகளுக்கு அரசாங்கம் உதவுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஐ.நா. அகதிகள் அமைப்பின் கூற்றுப்படி, பிப்ரவரி மாதம் மலேசியாவில் சுமார் 178,990 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் மலேசிய UNHCR-ரில் பதிவு செய்யப்பட்டனர் என அறியப்படுகிறது.
அந்த எண்ணிக்கையில் 101,010 ரோஹிங்கியா குடிமக்களும் அடங்குவர். மியான்மர் நாடு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து எந்த நாட்டுரிமையும் இல்லாமல் ரோஹிங்கியா குடிமக்கள் உள்ளனர்.
இதற்கிடையில், பயண கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள மலேசிய பட்டதாரிகள் தங்களது ஆதரவாளர்களிடமிருந்து (ஸ்பான்சர்கள்) உதவி பெறுவார்கள் என்று இஸ்மாயில் கூறினார்.
மாரா (Mara), பொது சேவைத் துறை (Jabatan Perkhidmatan Awam) மற்றும் பெட்ரோனாஸ் (Petronas) உதவித்தொகை ஆகியவை இதில் அடங்கும்.
தங்குமிடம், உணவு மற்றும் தேவைகளை ஈடுசெய்ய ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) உதவுவார்கள் என்று இஸ்மாயில் கூறினார்.
மலேசிய மாணவர்களை எகிப்தில் இருந்து அழைத்து வருவதற்காக ஒரு தனியார் நிறுவனம் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து வருவதாக வெளியான செய்திகளைப் பற்றிக் கேட்டபோது, இந்த முயற்சியை அரசாங்கம் வரவேற்கிறது என்றார்.
இருப்பினும், அந்த தனியார் நிறுவனம் குடிவரவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
தனியார் விமானங்களில் நாட்டிற்குத் திரும்பும் மலேசியர்களும் அரசாங்க வசதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்களுக்கான 14 நாள் தனிமைப்படுத்தப்படும் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும், சபா மற்றும் சரவாக் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூரிலிருந்து அவர்களின் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநிலங்களில் தனிமைப்படுத்தப்படலாம் என்று இஸ்மாயில் விளக்கினார்.