மத விவகாரங்களுக்கான பிரதம மந்திரி துறை அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுல்கிப்லி முகமட் அல் பக்ரி, நாட்டின் அனைத்து முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான தடை குறித்த அரசாங்க உத்தரவுகளுக்கும் மத அதிகாரிகளின் தீர்ப்பிற்கும் இணங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, அரசாங்கத்தால் மார்ச் 18 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று மூன்றாவது முறையாக முஸ்லிம்களால் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த முடியவில்லை என்றாலும், கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பு காரணமாக முஸ்லிம்கள் சுகாதார அவசர கால நிலையில் இருப்பதால் இந்த உத்தரவு தொடர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்த பிடிவாதமாக ஒரு சிலர் இருப்பதாக பாதுகாப்பு குழு எங்களுக்கு தெரிவிக்கும்போது நாங்கள் கவலைப்படுகிறோம். வெள்ளிக்கிழமை தொழுகையை யார் மூன்று முறை செய்யாவிட்டால், அவர் நயவஞ்சகர்களைச் சேர்ந்தவர் என்று ஒரு ஹதீஸ் உள்ளது.
“இப்படி கூறப்படுவது தவறான புரிதல்! எனவே, நயவஞ்சகர்கள் என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எந்தவொரு நோயும் இல்லாமல் வேண்டுமென்றே மூன்று முறை வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொள்ளாதவர்களே என்று நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்” என்று அவர் இன்று தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19, இது தொற்று நோய் பாதிப்பு மற்றும் ‘உம்மா’ (பொது நல்லெண்ணம்) பிரச்சனை ஆகும். இதனால் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அது முன்னுரிமை படுத்தப்பட வேண்டும்” என்று சுல்கிப்லி கூறினார்.
“நாம் அனைவரும் உடனடியாக இந்த தொற்றுநோயிலிருந்து வெளியேற விரும்புகிறோம். ஆனால் அதற்கு அனைத்து தரப்பினரின் குறிப்பாக நமது அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் தேவை. மசூதிக்குச் செல்ல வேண்டாம்! உங்கள் வீடுகளில் அல்லது அந்தந்த இடங்களில் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்றார்.