கொரோனா கிருமியிலிருந்து தப்பிக்க ஒராங் அஸ்லி காடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர்

முதல் ஒராங் அஸ்லி நபருக்கு தொற்று ஏற்பட்டதற்கு பின், மரக்கட்டைகளைக் கொண்டு தங்கள் கிராமத்தின் நுழைவாயிலைத் தடுத்த ஜெமெரி (Jemeri) குடியினரின் பாதி பேர், கொரோனா கிருமி பரவும் என்ற அச்சத்தில் சுற்றியுள்ள காடுகளுக்கு ஓடிவிட்டனர்.

“நாங்கள் மீண்டும் காட்டுக்குச் செல்கிறோம். எங்களை நாங்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், உணவைக் தேடிக்கொள்வதற்கும் நாங்கள் காட்டிற்கு செல்கிறோம்” என்று கிராமவாசியும் ஆர்வலருமான பெதுல் செமாய் ராய்ட்டர்ஸிடம் ஜெமெரி, பகாங்கிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார்.

“காடுகளிலிருந்து உணவை எவ்வாறு பெறுவது என்பது எங்களுக்குத் தெரியும், அங்கே நாங்கள் பயிரிடக்கூடிய சிலவும் உள்ளன.”

ஒராங் அஸ்லி, நாட்டின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர்.

முதல் ஒராங் அஸ்லி தொற்று கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

பிரபலமான சுற்றுலாத் தலமான கேமரன் மலைக்கு வெளியே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவனுக்கு கிருமி தொற்று உள்ளதாக ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் ஜூலி எடோ ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

இந்த கிராமமும், நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இடமும், நடமாட்டாக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. சிறுவன் எவ்வாறு பாதிக்கப்பட்டான் என்பது தெளிவாகத் தெரியவில்லை, என்று ஜூலி கூறினார்.

ஒராங் அஸ்லி, தீபகற்ப மலேசியாவின் ஆரம்பகால குடிமக்களின் சந்ததியினர். இங்கு சுமார் 200,000 பேர் உள்ளனர்.

நடமாட்டாக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்த பின், ஒராங் அஸ்லி சமுதாயத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காய்கறி, பழங்கள் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் தினசரி விற்பனையிலிருந்து பெறும் சிறிய வருமானமும் தற்போது துண்டிக்கப்பட்ட பின்னர் பலர் உணவைத் தேடுவதில் சிரமப்படுகிறார்கள். சிலர் கிருமி தொற்றிவிடும் என்ற கவலையாலும் பயத்தாலும் உணவு வாங்க நகரங்களுக்குச் செல்லக் கூட அஞ்சுகிறார்கள்.

நோய் பயம்

வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணிகளால் ஒராங் அஸ்லி சமூகத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவு. அவர்கள் விரைவில் நோயால் பாதிக்கப்படுகிறார். மலேசிய சராசரியான 0.4 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, அவர்களின் வறுமை விகிதம் 30 சதவிகிதத்திற்கும் அதிகமானதாகும்.

கடந்த ஆண்டு, தீபகற்ப மலேசியாவின் வடகிழக்கில் ஒரு பூர்வீக கிராமத்தில், டஜன் கணக்கானவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, 15 பேர் இறந்தும் உள்ளனர்.

தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெமுவான் பழங்குடியினரைச் சேர்ந்த ஷாக் கொயோக் தெரிவித்தார்.

“என்னால் கூட கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை” என்று கோலாலம்பூரில் வசிக்கும் ஷாக் கோயோக் கூறினார்.

ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்கள், தங்கள் சமூகங்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் எல்லைகளை மூடிவிட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, உலகளவில் 52,000 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

பல தசாப்தங்களாக, பாமாயில் மற்றும் மர நிறுவனங்கள் காடுகளை அழித்து, தங்கள் நிலங்களை ஆக்கிரமித்ததைக் கண்டுவருவதாக ஒராங் அஸ்லி கூறுகிறார்கள்.

“இந்த கிராமங்களில் சிலவற்றில், உணவுக்காகம் தீவனத்திற்காக அவர்கள் காடுகளுக்கு கூட செல்ல முடியாமல் உள்ளனர்” என்று ஒராங் அஸ்லி சமூகங்களுக்கு நிதி திரட்டுகின்ற Klima Action Malaysia-வை சார்ந்த இலி நதியா சுல்பக்கர் கூறினார்.

ஒராங் அஸ்லிக்கு நிதி திரட்ட முயற்சிக்கும் ஒரு குழு, உதவிக்காக அவர்களிடமிருந்து பல கோரிக்கைகள் வருகிறது என கூறினார். இதனால் அதன் அசல் நிதி திரட்டும் இலக்கை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

‘ஒன்று நாங்கள் கிருமியால் இறந்துவிடுவோம், இல்லையென்றால் பசியால் இறந்துவிடுவோம்’ என ஒரு கிராம பெரியவர் என்னிடம் சொன்னார்,” என்று இலி நதியா கூறினார்.