மத்திய கிழக்கு நாடுகளின் சிறப்பு தூதராக ஹாடி நியமிக்கப்பட்டார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை மத்திய கிழக்கு நாடுகளின் பிரதமரின் சிறப்பு தூதராக நியமித்தது, அக்கட்சியின் ஆதரவை பெற முற்படும் போக்கு என்று எழுந்த குற்றச்சாட்டுகளை பாஸ் மறுத்துள்ளது.

பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், ஹாடி எந்த அரசாங்க பதவியையும் கேட்டதில்லை, என்றார்.

“இது தொடர்பாக பாஸ், ஹாடிக்கு இப்பதவியை அளிக்கும் பிரதமரின் நடவடிக்கைகள், பாஸ் உறுப்பினர்களின் இதயங்களை வெல்வதற்கும், நிறைவு செய்வதற்குமான ஒரு முயற்சியே இந்நியமனம் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறது.

“ஏனென்றால், பாஸ், குறிப்பாக அதன் தலைவர் ஹாடி, ஒருபோதும் அரசாங்கத்தில் ஒரு பதவியையும் கேட்டதில்லை. ஆனால் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிலையை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் எல்லா சூழ்நிலையிலும் பணியாற்ற தயாராக இருக்கிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அன்று, பிரதமர் முகிதீன் யாசின், மத்திய கிழக்கிற்கான பிரதமரின் சிறப்பு தூதராக ஹாடி நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில், இந்த நியமனம், பாஸ் தலைவரை மற்ற அமைச்சர்களின் பதவிக்கு ஈடாக அவரை அமர்த்தியது.

“அப்துல் ஹாடி அவாங்கை மத்திய கிழக்கிற்கான பிரதமரின் சிறப்பு தூதராக அமைச்சராக நியமிக்க பிரதமர் ஒப்புக் கொண்டார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்துல் ஹாடி, உலக முஸ்லீம் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும், 1999 முதல் 2004 வரை திரெங்கானு மந்திரி புசாராக பணியாற்றியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தக்கியுதீன், பாஸ் ஒரு ‘ஹிஸ்பா’ ஆலோசனைக் குழுவை அமைத்து, பாஸ் அரசாங்க உறுப்பினர்களின் பணியை மேற்பார்வையிடவும், ஆலோசனை வழங்கவும் உள்ளதாக தக்கியுதீன் கூறினார்.

அவர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் உண்மையாகவும் நாட்டின் சிறந்த நலன்களுக்காகவும் செய்ய முடியும் என்பதை இது உறுதி செய்யும்.

“பாஸ் தலைவர் இப்போது அரசாங்கத்தில் இருப்பதால், பாஸ் சியுரா கவுன்சிலின் தலைவர்களிடமிருந்து (Majlis Syura Ulamak PAS) இந்த குழு நியமிக்கப்படும்.

“பாஸ், முன்பு கிளாந்தான் மற்றும் திரெங்கானு அரசாங்க ஆலோசனைக் குழுவை அமைத்து, அதை பாஸ் தலைவர் தலைமையில் வைத்திருந்தது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஹாடியை தனது சிறப்பு தூதராக நியமித்த பிரதமரின் நம்பிக்கைக்கு பாஸ் நன்றி தெரிவித்ததாக தக்கியுதீன் கூறினார்.

இந்த நியமனம், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் தூதரக மற்றும் சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திற்கு உதவும் என்று நம்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.

மலேசியாவிற்கும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அப்துல் ஹாடியின் நியமனம் காணப்பட்டதாக நேற்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விளக்கினார்.

“இது ஒரு அரசியல் நியமனம் அல்ல” என்று வலியுறுத்தினார். மாறாக, அப்துல் ஹாடியின் நியமனம், அவரது தலைமைத்துவ அடிப்படையில் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.