கொரோனா வைரஸ்: சரியும் வேலைவாய்ப்புகள், இருளில் எதிர்காலம் – சர்வதேச செய்திகள்

சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 58,900 பேர் உயிரிழந்துள்ளனர். 2,14,459 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை இந்தோனீசியாவால் சமாளிக்க முடியுமா?

அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனீசியா மிக சமீபத்தில்தான் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியது. ஆனால் இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமானது என்கிறார்கள் வல்லுநர்கள் மார்ச் மாதத்தில்தான் அங்கு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து அதிக மணங்கள் பதிவான நாடாக அது இருக்கிறது. 17ஆயிரம் தீவுகளை அடங்கிய இந்தோனீசியா, பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.

இந்த கொரேனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க அந்நாட்டின் சுகாதாரத்துறையால் முடியுமா என்பது கேள்விக்குறியே. மேற்கு ஜாவாவில் உள்ள பன்டுங்கில் பொது சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரியும் நோவிடா புர்வன்டி மற்றும் அவருடன் வேலை செய்பவர்கள் நிதித்திரட்டி மழையின் போது அணியப்படும் ரெயின் கோட்டுகள் மற்றும் மருத்துவ கண்ணாடிகளை வாங்கியுள்ளனர்.

“கிருமி நாசினிகள் மூலம் ரெயின் கோட்டுகளை சுத்தம் செய்து அதனை மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறோம். அரசாங்கத்தின் பாதுகாப்பு கவசங்களுக்காகக் காத்திருக்கிறோம். என்னால் என்95 ரக முகக்கவசங்களை வாங்க முடியவில்லை. அது மிகவும் விலை உயர்ந்தது. அதோடு கிடைப்பது கடினமாக உள்ளது” என்கிறார் நோவிடா.

இரண்டு குழந்தைளுக்கு தாயான அவர், “என்னால் தூங்க முடியவில்லை. மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே அவர்களை தொட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறுகிறார்.

மேலும் அதிக மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திறனும் அந்நாட்டிடம் இல்லை. இறந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவர்களது உடல்கள் பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட புதைக்க வேண்டும் என ஜகார்டா ஆளுநர் அனீஸ் பசவெடன் கூறியுள்ளார்.

இந்தோனீசியிவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க அதில் குழந்தைகளும் இருக்கிறார்கள். 3 வயது குழந்தை உட்பட இதுவரை 4 குழந்தைகள் கொரோனா தொற்றால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனீசியாவில் வைரஸ் தொற்றின் மையமாக தலைநகர் ஜகார்த்தா விளங்குகிறது.

சரியும் உலக பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 701, 000 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளாக வளர்ச்சி முகத்தில் அமெரிக்காவிலிருந்த வேலைவாய்ப்புகள் மார்ச் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தடைப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 701, 000 பேர் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதம் கணக்கின்படி 4.4 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.

1975 ஆம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் நிலைமை இவ்வாறாக ஆகி இருப்பதாக அமெரிக்கத் தொழிலாளர் துறை தரவுகள் கூறுகின்றன.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைச் சர்வதேச நிலையும் இதுவாகத்தான் உள்ளது. 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச மந்தநிலையைவிட மோசமான நிலை ஏற்படும் என சர்வதேச மதிப்பீடு கூறுகிறது.

பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கம் செலுத்திய அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தித் துறை மிக மோசமாக சரிந்துள்ளது.

நாம் கணிப்பதைவிட நிலைமை மேலும் மோசமாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

BBC.COM