நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று சிறைச்சாலைத்துறை வேண்டுகோள்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு சிறைச்சாலைத்துறை நீதிமன்றத்தை கோரியுள்ளது.

இந்த நடவடிக்கை, சிறைச்சாலைகளில் நெரிசலுக்கு வழிவகுக்கும் என்றும், அங்கு கூடல் இடைவெளி நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.

மேலும், சிறைக்கு அனுப்பப்பட்ட புதிய கைதிகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களா என்பதும் தெரியாது என்று சிறைச்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைத்துறை இயக்குநர் சுல்கிப்லி உமார் உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் அகமட் டெர்ரிருதீன் முகமட் சல்லேவுக்கு எழுதிய கடிதத்தில் இது தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, 2020 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காக 378 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை பதிவுகள் காட்டுகின்றன என்று சுல்கிப்லி கூறினார்.

“தற்போதுள்ள நெரிசலுக்கு மேலாக, சிறைச்சாலைகளில் கோவிட்-19 நோய் பரவ காரணமாக இருக்க இது வழிவகுத்துவிடும் என்று சிறைச்சாலைத்துறையும் கவலை கொண்டுள்ளது.

“சிறைச்சாலைகளில் கோவிட்-19 பரவ வாய்ப்புள்ளதால் இது ஒரு பெரிய பிரச்சினை என்று சிறைச்சாலைத் துறை நம்புகிறது. ஏனெனில் இங்கு கூடல் இடைவெளி சாத்தியமில்லாத ஒன்றாகும். சிறைச்சாலைகலில் கோவிட்-19 பரவல் கட்டுப்பாடற்ற பாதிப்பாகிவிடும், கைதிகள் மற்றும் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்,” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மீறல்களின் குற்றவாளிகளை கட்டாய வருகை சட்டதின் 1954/ Akta Kehadiran Wajib 1954 கீழ் சமூக பணிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுல்கிப்லி பரிந்துரைத்தார். இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் சமூக சேவை உத்தரவுகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

இது சிறைச்சாலைத் துறையால் 2010 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் முயற்சியில், நாடு மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை மேற்கொண்டு வருகிறது.

முதலில் மார்ச் 31-ல் முடிக்க திட்டமிட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, இப்போது ஏப்ரல் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ், அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களும் சேவைகளும் மூடப்பட வேண்டும், அதே நேரத்தில் உணவு வாங்குவது போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், இன்னும் பல நபர்கள் விதிகளை மீறுகின்றனர். ஆரம்ப கட்டங்களில், அரசாங்கம் ஆலோசனை வழங்குவது போன்ற மென்மையான அணுகுமுறையை பின்பற்றியது. இப்போது அதிகாரிகள் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாதவர்களை கைது செய்வதன் மூலம் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.