கொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்

  1. சர்வதேச அளவில் கொரோனாவால் இதுவரை 1,202,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,753 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

  2. 246,457 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

  3. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,544 ஆக அதிகரித்து, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

  4. இதற்கு அடுத்த எண்ணிக்கையை ஸ்பெயின் கொண்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126,168 ஆக உள்ளது.

  5. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,362 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 20,996 பேர்.

பிரிட்டனில் ஒன்பது நாட்களில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை

கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்க ஒன்பதே நாட்களில் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தி இருக்கிறது பிரிட்டன்.
சீனா கட்டிய மருத்துவமனை போல அல்ல இது. கிழக்கு லண்டனில் மாநாடுகள், கண்காட்சிகள் நடக்கும் எக்செல் கண்காட்சி மையத்தைத் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி உள்ளது பிரிட்டன் அரசு.

இந்த மருத்துவமனையில் நான்காயிரம் படுக்கை வசதிகள் இருக்கும். 87, 328 சதுரடி கொண்ட இந்த மருத்துவமையை உருவாக்க 9 நாட்கள் ஆகி இருக்கிறது. இங்கு 80 வார்டுகள் உள்ளன். ஒவ்வொரு வார்டிலும் 42 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.