சகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்

குடிபோதையில் சக நாட்டவருடன் நிகழ்ந்த சண்டையில், மியான்மர் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் புக்கிட் மெர்தாஜாம், தாமான் பெலாங்கி, பிளோக் யூ என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து நேற்று மரணமடைந்தார்.

மரணமுற்ற அந்த 30 வயதுடையவரின் சடலத்தை கட்டிடத்தின் தரை தளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக செபெராங் பெராய் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப். முகமட் முஸ்தபா பிடின் தெரிவித்தார்.

மேலிருந்து விழுந்ததன் காரணமாக அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் உடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன,” என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் மற்றொரு மியான்மர் நாட்டவர் ஒருவரை போலீசார் கண்டனர். சண்டையின்போது பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் ஒரு கத்தியையும் அவரிடமிருந்து எடுத்ததாக அவர் கூறினர்.

“25 வயதான அந்த நபர், சண்டையின்போது விழுந்த தனது நண்பரை (பாதிக்கப்பட்டவரை) காண கீழே சென்றதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஒரு தொழிற்சாலை ஊழியருமான அந்நபருக்கு கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், விசாரணைக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பு சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் முகமட் முஸ்தபா தெரிவித்தார்.

பிரேத பரிசோதனைக்காக சடலமும் அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.