PHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின் கடிதம் உலக முஸ்லீம் தலைவர்களை ஏமாற்றும் முயற்சி – அமானா

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் அனுப்பிய கடிதத்திற்கு அமானா இன்று பதிலளித்துள்ளது. ஹாடி உலக முஸ்லீம் தலைவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டத்தை காட்டும் முயற்சி இது என்று அமானா கூறியுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள், இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியினர் என்று தோற்றத்தை அளிக்க ஹாடி முயன்றுள்ளதாக ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார் கட்சி தகவல் தொடர்பு இயக்குனர் காலித் சமாட்.

“கடிதத்தின் உள்ளடக்கத்தை கண்டு அமானா வருத்தப்படுகிறது; இது ஆதாரமற்றது, போலியானது, தவறான கண்ணோட்டத்தை கொடுக்க வல்லது; அவதூறான குற்றச்சாட்டுகள் நிறைந்தது”.

“மலேசியாவின் அரசியல் நிலைப்பாட்டை தவறாக சித்தரிக்க அப்துல் ஹாடி முயன்றுள்ளார் என்பது கடிதத்தில் தெளிவாக உள்ளது”.

“அப்துல் ஹாடி பொறுப்பற்ற முறையில் வேண்டுமென்றே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளை இஸ்லாத்திற்கு எதிரிகளைப் போன்று தவறாக சித்தரித்து, மோசமான சொற்களை பயன்படுத்தியுள்ளார்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் உலகளாவிய முஸ்லீம் இயக்கத் தலைவர்களுக்கு அப்துல் ஹாடி அரபிய மொழியில் எழுதியிருந்த ஒரு கடிதத்தை அவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ள அக்கடிதம் குறித்து பாஸ் தலைவர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

பாக்காத்தான் ஹராப்பான் முஸ்லிம் அல்லாதவர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்தவ செல்வாக்கின் கீழ் உள்ளதாகவும், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், சியோனிஸ்டுகள் Zionis மற்றும் ப்ரீமேசன் Freemason இயக்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதாகவும் கடிதத்தில் அப்துல் ஹாடி கூறியதாக காலித் கூறினார்.

மேலும், பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரு ‘ஆபத்தான மதச்சார்பற்றவர்’ என்றும் அவரது தனிப்பட்ட நடத்தையிலும் ஒழுக்கத்திலும் மோசமானவர் என்றும் அப்துல் ஹாடி குற்றம் சாட்டியுள்ளார் என்றும் காலித் கூறினார்.

“அன்வார் இஸ்லாமிய எதிரிகளின் தலைவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டார், அவருக்கு ஒரு கிறிஸ்தவ கட்சியாக சித்தரிக்கப்படும் டிஏபி ஆதரவளிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

“அன்வார் இப்ராஹிம் மற்றும் டிஏபி தலைவகள் நிறுவிய மதச்சார்பற்ற இஸ்லாமிய கட்சி தான் அமானா என்றும் அப்துல் ஹாடி குற்றம் சாட்டினார்.

“அமனாவில் இருப்பவர்களை ஒரு அவசர மற்றும் சந்தர்ப்பவாத குழு என்றும் பாஸ் கடிசியை விட்டு வெளியேறியவர்கள் என்றும் ஹாடி விவரித்துள்ளார்.

“இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்துல் ஹாடியின் வாதத்தை நிலைநிறுத்தவும், கடிதம் பெறுபவரை பக்காத்தான் ஹராப்பான் இஸ்லாத்திற்கு ஒரு எதிரி மற்றும் ஒரு அச்சுறுத்தல் என்பதையும் நம்ப வைப்பதற்காக செய்யப்பட்டுள்ளன” என்று ஷா ஆலாம் எம்.பி.யான காலித் கூறியுள்ளார்.

பாஸ் மற்றும் அதன் கூட்டணிகள் அரசாங்கத்தை கைப்பற்றும் வரையில், இஸ்லாமிய விரோதவாதிகள் ஆட்சியில் இருப்பதை உறுதி செய்வதற்காக டாக்டர் மகாதிர் முகமதுவை அகற்றவும் உள் சதிகள் நடந்ததாக அப்துல் ஹாடி கூறியிருப்பதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

“உண்மையில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், துன் டாக்டர் மகாதிர் முகமதுவின் தலைமையில், இஸ்லாத்தை ஒரு கூட்டாட்சி மதமாக உறுதியாக பாதுகாத்து நின்றது,” என்று காலித் கூறினார்.

இதனால், பாஸ் தலைவரின் இந்த ‘அவதூறு அரசியல், பகைமை, விரோதப் போக்கு மற்றும் ஒழுக்கக்கேடான தூண்டுதல் ஆகியவற்றை நிராகரிக்க மலேசியர்களுக்கு காலித் அழைப்பு விடுத்தார்.

“அப்துல் ஹாடியின் அணுகுமுறை மற்றும் நடத்தையை ‘சாக்கடை அரசியல்’ என்று அழைக்கலாம். இனி சேவை செய்யத் தகுதியற்றது”. இனி இதை சட்டை செய்யவோ பின்பற்றவோ தகுதியற்றவை என்று அவர் கூறினார்