டெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற 8 மலேசியர்கள் தடுத்து வைப்பு
டெல்லியில் நடைபெற்ற தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் தாயகம் திரும்ப முற்பட்ட மலேசியக் குடிமக்கள் 8 பேர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் சமய நிகழ்வு ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட 8 மலேசியர்களும் தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் மறைந்திருந்து நாட்களைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய அரசு, அவர்களின் விசாக்களையும் ரத்து செய்துள்ளது.
சுற்றுலா விசாவில் வந்து மத நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் அந்த வெளிநாட்டவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் டெல்லி போலிசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உணவுகள் மூலமாகவும் கொரோனா கிருமித் தொற்று பரவுமா?
கொரோனா கிருமித் தொற்று உணவுகள் மூலமாகவும் பரவக்கூடும் என்பதற்கு எந்தவித சான்றுகளும் இல்லை என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் இணையம் வழி உணவு வகைகளை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் இயங்குகின்றன. இந்நிலையில் உணவக ஊழியர்கள் சிலருக்குக் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே, அந்த ஊழியர்கள் மூலம் கிருமித் தொற்று பரவும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில் உணவுகள் மூலம் கோவிட் 19 நோய்த்தொற்று பரவும் என்பதற்கு அறிவியல் பூர்வமான, மருத்துவ ரீதியிலான சான்றுகள் ஏதும் இல்லை என டாக்டர் நூர் இஷாம் தெளிவுபடுத்தி உள்ளார்.
அதேபோல் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசங்கள் அணியவேண்டுமா என்பது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலுக்காக காத்திருப்பதாகவும் அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற மலேசிய தம்பதியர்
திருச்சியில் மலேசியத் தம்பதியர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாயகம் திரும்புவதற்கான பயணிகளின் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டதால் மனவேதனை அடைந்து அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான மலேசியர்கள் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மலேசியக் குடிமக்கள் நாடு திரும்ப இந்திய அரசின் ஒத்துழைப்போடு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 1,2 மற்றும் 4ஆம் தேதிகளில் இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம் 500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அக்குறிப்பிட்ட தம்பதியர் நாடு திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தபோது தங்கள் பெயர் பயணிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
இதையடுத்து 60 வயதைக் கடந்த கணவரும் சுமார் 55 வயதுள்ள மனைவியும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றனர். எனினும் இதுகுறித்துத் தகவலறிந்த விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தி விபரீதம் நிகழாமல் தடுத்தனர்.
மேலும் விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அத்தம்பதியர் மலேசியா செல்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தனர். என்ன காரணத்திற்காக அத்தம்பதியரின் பெயர் பயணிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை.
BBC.TAMIL