பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று மக்கள் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு அல்லது “கூடுதல் தொகுப்பு” நடவடிக்கைகளை அறிவித்தார்.
RM10 பில்லியன் மதிப்பிலான அக்கூடுதல் தொகுப்பு SMEகளின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும் இதனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
மார்ச் 27 அன்று அறிவிக்கப்பட்ட ஊதிய மானிய திட்டத்திற்கான ஒதுக்கீடு RM5.9 பில்லியனிலிருந்து RM13.8 பில்லியனாக உயர்த்தப்படும். இது RM7.9 பில்லியனின் அதிகரிப்பு என கணக்கிடப்பட்டுள்ளது.
கூடுதல் முயற்சியின் கீழ், RM4,000 மற்றும் அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் உள்ளூர் தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் பின்வருமாறு ஊதிய மானிய உதவியைப் பெறும்:
- 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, ஒரு ஊழியருக்கு RM600 மானியம் பராமரிக்கப்படுகிறது.
இருப்பினும், மானியங்களுக்கு தகுதியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 200 தொழிலாளர்களாக உயர்த்தப்படும்.
76 முதல் 200 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு, நிறுவனம் ஒரு ஊழியருக்கு RM800 ஊதிய மானியத்தைப் பெறும்.
75 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு, நிறுவனம் ஒரு ஊழியருக்கு RM1,200 மானியம் பெறும்.
“இந்த மேம்பாடுகளின் மூலம், நிறுவனம் அதிக நன்மைகளையும் உதவிகளையும் பெறும்”.
“இந்த உதவி மூன்று மாதங்களுக்கானது. இது ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் எஸ்எஸ்எம் (SSM) அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவுசெய்து, மற்றும் சொக்ஸோவில் பதிவுசெய்த முதலாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும்.
“இதனால், சுமார் 4.8 மில்லியன் தொழிலாளர்கள் இந்த முயற்சியால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த உதவியைப் பெற விரும்பும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது வேலையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இது ஊதிய மானியம் பெறும் மூன்று மாதங்களுக்கும், அதன்பிறகு மூன்று மாதங்களும் ஆகும்.