பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி ஜி. ஹெஸ்டஸ் கெவின், கோவிட்-19 கொரோனா கிருமியால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் யூனிஸின் கூற்றுப்படி, 30 வயதான அந்நபர் கோவிட்-19 சோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
திருடியதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி கைது செய்யப்பட்ட அக்கைதி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி ஏப்ரல் 5 ஆம் தேதி காலையில் இறந்துள்ளார்.
“இறந்தவரின் உடல் கோவிட்-19 சோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது” என்று யூசோப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இறப்புக்கான காரணத்தை தீர்மானிக்க முடியவில்லை என்றும், போலிஸ் இரசாயன ஆய்வகத்திலிருந்து ஒரு முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதே போல் ஒரு நோயியல் நிபுணரின் உடல் திசு மாதிரியின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் தடயவியல் துறையால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையின் முடிவு நிலுவையில் உள்ளதால், தற்போதைக்கு இதை ‘திடீர் மரணம்’ என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர்.
இறந்தவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.50 மணியளவில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தெரிந்த பின் ஆம்புலன்ஸை அழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஆம்புலன்ஸ் அங்கு (லாக்கப்பிற்கு) வந்தபோதே, அந்த நபர் ஏற்கனவே 1.10 மணிக்கு இறந்து விட்டதாக தெரிகிறது.
இந்த மரணம், காவலில் இருக்கும் கைதி காவல்துறையால் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது குறித்து கேள்விகளை எழுப்புவதாக மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனமான சுவாராம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.