30-40% அதிகமான தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு, பணிநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், – MTUC

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) பராமரிப்பு தொகுப்பில் இடம்பெறாத தொழிலாளர்களைப் பாதுகாக்க, அவசர பணி விதியை (Peraturan Kerja Kecemasan) அறிமுகப்படுத்துமாறு மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊதிய மானியங்களைப் பெறும் முதலாளிகள் ஆறு மாதங்களுக்கு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று பிரதமர் நேற்று அறிவித்த போதிலும், அவ்விதி ஒரு மாதத்திற்கு RM4,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று MTUC பொதுச்செயலாளர் ஜே சாலமன் கூறினார்.

ஒரு மாதத்திற்கு RM4,000 முதல் RM8,000 வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கான ஆபத்து அல்லது முதலாளிகள் அவர்களின் ஊதியத்தை குறைக்கும் பாதிப்பும் உள்ளது. SMEகளின் தொழிலாளர் தொகுப்பில் 30 முதல் 40 சதவீதம் வரை அவர்கள் அடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஊதிய மானியத் திட்டத்தில் இந்த தொழிலாளர்கள் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த MTUC, அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது”.

“இதைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கையாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளிகள், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்காத ‘அவசர பணி விதியை’ அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பி40 பிரிவில் இடம்பெற அவர்களின் வருமானம் தகுதி பெறாததால் இந்த குழுவில் உள்ள தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்று சாலமன் கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர்கள் பொதுவாக கோலாலம்பூர், ஜொகூர் பாரு மற்றும் பினாங்கு போன்ற அதிக வாழ்க்கைச் செலவுகள் உள்ள நகர்ப்புற மையங்களில் வசிப்பதனால், அவர்களின் சம்பளம் அவர்களின் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதில்லை.

“சம்பளம் குறைக்கப்படுதல், அல்லது ஊதிய இழப்புகள், இவை அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒரு பேரழிவாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

300 தொழிலாளர்களின் புகார்கள்

மலேசிய தொழிலாளர்களிடமிருந்து இதுவரை 300 புகார்களை MTUC பெற்றுள்ளது. அவர்கள் ஊதியம் பெறாத விடுப்பு எடுக்கவும் அல்லது ஊதியக் குறைப்பைப் பெறவும் “வற்புறுத்தப்பட்டுள்ளனர்”. அதே நேரத்தில், பணி ஒப்பந்தம் முடிந்த தொழிலாளர்கள் பணியை தொடர ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்று சாலமன் மேலும் கூறினார்.

நடமாட்டக் காலத்தில் முதலாளிகள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது அவர்களின் ஊதியத்தை குறைக்கவோ முடியாது என்ற அரசாங்கத்தின் எச்சரிக்கையை புறக்கணித்துள்ளன. அதனால், தனியார் துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MTUC அரசாங்கத்தை வலியுறுத்தியது.

“நடமாட்டக் கட்டுபாடு ஆணை அமலாக்கத்தின் மூன்று வாரங்களுக்குப் பிறகு இவை அனைத்தும் நடந்துள்ளன”.

“[…] இது தொகையின் ஒரு பகுதியே என்று நாங்கள் நம்புகிறோம், இன்னும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.

சில SME முதலாளிகள் தங்கள் வணிகம் பாதித்துள்ளது என்பதை உறுதிபடுத்த தங்கள் நிதி அறிக்கைகளை வெளியிட மறுக்கின்றனர் என்றும், இதனால் ஊதியக் குறைப்புக்களையும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதையும் சட்டப்பூர்வமாக்குகிறது என்றும் சாலமன் கூறினார்.

“சில SMEக்கள் அரசாங்க மானியங்களை ஏமாற்றி பெற்று லாபம் ஈட்ட முயற்சிக்கின்றன என்று இதை விளக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நோக்கத்திற்காக, நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலகட்டத்தில் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் குறிப்பாக ஊதியக் குறைப்பு மற்றும் ஊதியமில்லாத விடுப்பு தொடர்பாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலாளிகளுக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு MTUC அரசாங்கத்திடம் அழைப்பு விடுத்தது..

இந்த விவகாரத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தாலும், பணிநீக்கம் அல்லது வி.எஸ்.எஸ். உட்பட தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முதலாளிகள் அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளனர் என்பது “அறியப்பட்ட உண்மை” என்று அவர் கூறினார்.

“தொழிலாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான எளிதான இலக்காக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் முதலாளிகள் கடினமான காலங்களில் அரசாங்க உதவியில் இருந்து பயனடைகிறார்கள். அதே நேரத்தில் நல்ல காலங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் உதவியுடன், தங்களின் வணிகங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவர்களின் ஊழியர்களின் பணியைப் பாதுகாப்பதுமே இப்போது SMEகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். மேலும் SME-க்களால் பணம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், அது மோசடி என்றெ எடுத்துக் கொள்ள முடியும்.

“ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர்கள் தங்கள் தொழிலாளர்களை ஆதரிப்பதற்கு அரசாங்கத்தின் பல்வேறு நிதிப் உதவிகளில் சிலவற்றைப் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்களை பணி நீக்குவதையும் ஊதியங்களைக் குறைப்பதையுமே எப்போதும் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.