கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் ஒராங் ஊத்தானுக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. இது சபாவில் அச்சுறுத்தப்பட்ட ஒரு உயிரினமாகும்.
மார்ச் 18 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறைக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, இங்குள்ள செபிலோக் வனவிலங்கு புகலிடத்தை மூடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இது இம்மாபெரும் குரங்கு இனங்களை வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முக்கியமான படியாக கருதப்படுகிறது.
இந்த இடத்தின் மத்திய மேலாளர் சில்வியா அல்சிஸ்டோ, 55 ஆண்டுகாலத்திற்கு பிறகு இந்த மையம் அதன் ‘கதவை’ பொதுமக்களுக்கு மூட வேண்டியது இதுவே முதல் முறையாகும். பார்வையாளர் டிக்கெட் விற்பனையிலிருந்து நிதி திரட்டலும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மையத்தை மூடுவது அவசியம் என்று கூறியுள்ளார்.
இந்த மையத்தை நிர்வகிக்க சபா மாநில அரசிடமிருந்து போதுமான நிதி உதவி இருப்பதாக அவர் கூறினார். இது உலகின் மிக நீண்டகால மறுவாழ்வு மையங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒராங் ஊத்தான் அல்லது ‘காட்டின் தலைவர்’ என்றழைக்கப்படும் இவ்வினம், மனிதர்கள் டி.என்.ஏ (DNA) வரிசையில் 96 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அல்சிஸ்டோ கூறுகிறார்.
“எனவே, அவர்கள் (ஒராங் ஊத்தான்) மனிதர்களைப் போலவே ஒரே மாதிரியான நோயை கொண்டிருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
வனவிலங்கு பாதுகாப்பு நிபுணர்களுக்கான சர்வதேச ஒன்றியம் (Kumpulan Pakar Kesihatan Hidupan Liar Kesatuan Antarabangsa Untuk Pemuliharaan Alam Sekitar (IUCN)), நிலைத்தன்மை ஆணையம் (Suruhanjaya Kelangsungan Spesies (SSC)) மற்றும் பெரிய குரங்குகள் பற்றிய முதன்மை நிபுணர் குழு (Seksyen Kumpulan Pakar Primer) ஆகியவற்றுடன் ஒரு கூட்டு அறிக்கையில், ஓராங் ஊத்தான் போன்ற பெரிய குரங்குகள் கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்படுமா என்பது அறியப்படவில்லை என்று அல்சிஸ்டோ கூறினார்.
இருப்பினும், பெரிய குரங்குகள் மனித சுவாச நோய்க்கிருமிகளுக்கு ஆளாகின்றன என்பதற்கு போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளன என்றும், ஆகையால் இந்த பாலூட்டிக்கு கோவிட்-19 தொற்று ஏற்படக்கூடும் என்று கருதலாம் என்றும் அவர் கூறினார்.
“ஒராங் ஊத்தான் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதால், ஆபத்தை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படுவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்ட போதிலும், மையத்தில் உள்ள ஒராங் ஊத்தான்கள் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களால் நன்கு கவனிக்கப்படுவதாக அல்சிஸ்டோ கூறினார்.
50 தொழிலாளர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் மேல் குறைக்க வேண்டியிருந்தாலும் வேலை சுமை அப்படியே தான் உள்ளது, என்றார்.
இந்த மையத்தில் 60க்கும் மேற்பட்ட ஒராங் ஊத்தான்கள் இருப்பதாக அல்சிஸ்டோ கூறினார். அவற்றில் 40 பராமரிப்பு மையங்களில் உள்ளன, மீதமுள்ளவை காட்டில் சுற்றுவதற்கு விடப்பட்டடன என்று தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் முடிந்தபின்னர் இந்த மையம் பொதுமக்களுக்கு திறக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, இந்த முடிவு மாநில அரசைப் பொறுத்தது என்றும், முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், Orang Utan Appeal UK (OAUK)) நிறுவனர் மற்றும் தலைவரான சூசன் ஷெவர்ட், மழைக்காடு சுற்றுச்சூழலுக்கு ஒராங் ஊத்தான்களின் பாதுகாப்பு முக்கியமானது என்றார்.
“ஒராங் ஊத்தான்கள் இல்லாவிட்டால், சுற்றுச்சூழல் அமைப்பு உயிர்வாழ வாய்ப்பில்லை. மழைக்காடுகளின் சரியான ‘வீடு’ இல்லாமல், ஒராங் ஊத்தான்கள் அழிந்துவிடும்”.
“எனவே, ஒராங் ஊத்தான்கள் இல்லாவிட்டால், ‘உலகின் நுரையீரல்’ (காடுகள்) சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்,” என்று கூறினார்.
இந்த பாலூட்டிகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய செபிலோக் வனவிலங்கு மீட்பு மையத்திற்கு உதவ OAUK கடுமையாக உழைத்து வருவதாக ஷெவர்ட் கூறினார்.
“இந்த நோய் (கோவிட்-19) ஏற்கனவே ஆபத்தான அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள ஒராங்குட்டான்களுக்கு ஆபத்தானது. இது நம்மால் எதிர் கொள்ள முடியாத சவால்” என்று அவர் கூறினார்.
உலக-மலேசியா நிதியம் Tabung Alam Sedunia-Malaysia (WWF-Malaysia), ஓர் அறிவியல் ஆய்வில், 2002 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையில் சபா தாழ்நிலப்பகுதிகளில் ஒராங் ஊத்தான்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் குறைவு காணப்பட்டது என்று கூறியுள்ளது.
பயனுள்ள வன மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றி மாநிலத்தில் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், 70 சதவீதத்திற்கும் அதிகமான பாலூட்டிகளின் எண்ணிக்கை நிலையானதாக இருப்பதையும் அது கண்டறிந்துள்ளது.
ஆய்வின்படி, 2002இல் 5,376 ஒராங் ஊத்தான்கள் இருந்தன, அவற்றின் தொகை 2017 இல் 5,933 ஆக அதிகரித்தது.
போர்னியோ மற்றும் சுமத்ரா முழுவதும் சுமார் 71,000 ஒராங் ஊத்தான்களை பாதுகாத்து வரும் சபா, மலேசியாவின் ஒராங் ஊத்தான்களை பாதுகாப்பு கோட்டையாக உள்ளது.