கோவிட்-19: மூன்று புதிய மரணங்கள், 184 பாதிப்புகள், 165 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் | புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. 184 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளன.

மூன்று புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த பாதிப்புகள் 4,530 ஆகவும், மொத்த குணமடைந்தவர்கள் 1,995 ஆகவும் உள்ளன என்றுள்ளார்.

தற்போது செயலில் 2,462 பாதிப்புகள் உள்ளன. தற்போதைய பாதிப்புகளில், 72 நோயாளிகள் ஐ.சி.யுவில் உள்ளனர். இது நேற்றையதை விட மூன்று அதிகமாகும்.

38 நோயாளிகள் வென்டிலேட்டர்களில் உள்ளனர். இது நேற்றையதை விட இரண்டு குறைவாகும்.

மூன்று புதிய மரணங்கள் பின்வருமாறு:

‘நோயாளி 3,091’ (71வது மரணம்)

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கீல்வாதம் போன்ற வரலாற்றைக் கொண்ட 66 வயதான மலேசிய நபர். அவர் ஸ்ரீ பெட்டாலிங் கூட்டத்தைச் சேர்ந்த “நோயாளி 452” உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஏப்ரல் 1 ஆம் தேதி நெகிரி செம்பிலனில் உள்ள துவான்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இன்று மதியம் 12.05 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 537’ (72வது மரணம்)

71 வயதான மலேசிய நபர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வரலாறு கொண்டவர். மார்ச் 15 ஆம் தேதி சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இன்று காலை 11.15 மணிக்கு காலமானார்.

‘நோயாளி 2,399’ (73வது மரணம்)

உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 63 வயதான மலேசிய நபர். மார்ச் 25 ஆம் தேதி பேராக் ராஜா பெர்மிசுரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இன்று மதியம் 12 மணியளவில் காலமானார்.

இதற்கிடையில், மொத்த பாதிப்புகளில், 224 பாதிப்புகள் சுகாதார அமைச்சின் ஊழியர்களை உள்ளடக்கியது என்று நூர் ஹிஷாம் கூறினார். இவற்றில், 150 நோய்த்தொற்றுகள் நெருங்கிய தொடர்பினால் ஏற்பட்டுள்ளன.

மற்ற 41 பாதிப்புகள், கடுமையான சுவாச நோய்த்தொற்று நோயாளிகளிடமிருந்தோ அல்லது கோவிட்-19 நோய்த்தொற்று நிலை அறியப்படாத நோயாளிகளிடமிருந்தோ ஏற்பட்டுள்ளன.