மஸ்ஜித் இந்தியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது

மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை கடுமையாக்குவதாக (PKPD) பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அறிவித்துள்ளார்.

முன்னதாக, இப்பகுதியில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் ஆகிய இரண்டு குடியிருப்புகள் மட்டுமே PKPD-யின் கீழ் வைக்கப்பட்டன.

ஆனால் இப்போது ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் துன் பேராக், ஜாலான் மலாக்கா மற்றும் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள ஜாலான் அம்பாங் ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களை உள்ளடக்கி PKPD விரிவாக்கப்பட்டுள்ளது.

சிம்பாங் ரெங்கம் பகுதி, ஹுலு லங்காட், ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் உள்ள சிட்டி ஒன் பிளாசா கட்டிடம் மற்றும் மஸ்ஜித் இந்தியாவில் இரண்டு கட்டிடங்களுக்குப் பிறகு இது ஐந்தாவது PKPD ஆகும்.

“மஸ்ஜித் இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐந்தாவது PKPD உத்தரவை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்”.

“இது ஏப்ரல் 14, 2020 முதல் ஏப்ரல் 28 வரை அமலுக்கு வரும்” என்று இஸ்மாயில் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இஸ்மாயில், பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சராகவும் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் அமலாக்கத்தை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஏப்ரல் 12 ஆம் தேதி, சிலாங்கூர் மேன்ஷனில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 43 ஆக இருந்து 75 ஆக கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது.

மலையன் மேன்ஷனில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை நான்காக உள்ளது.

இரண்டு கட்டிடங்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியிருக்கின்றனர்.