ஹுலு லங்காட்டில் ஒரு தஃபிஸ் பள்ளி மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு தவிர, கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (PKPD) இன்று முடிவுக்கு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
“ஹுலு லங்காட்டில் உள்ள சுங்கை லூய்யில் (பத்து 21 முதல் பத்து 23 வரை), இன்று PKPD முடிவுக்கு வருகிறது”.
“சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ஹுலு லங்காட்டில் PKPD அகற்றப்பட்டது. மஹாத் தஹ்ஃபிஸ் அன்-நபாவியா மற்றும் பத்து 23 கம்போங் பாயா லேபாரில் உள்ள ஒரு வீடு, இவைகளுக்கு மட்டும் PKPD 28 ஏப்ரல் 2020 வரை நீட்டிக்கப்பட்டது” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
இங்கு கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான பாதிப்புகள் இன்னும் இருப்பதால், PKPD தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.
ஒரு மதப் பள்ளியில் வசித்த கால்வாசிக்கும் அதிகமானோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் மார்ச் 29 அன்று, ஹுலு லங்காட்டில் பல பகுதிகளில் PKPD-யை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.
இதற்கிடையில், கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் அதிகரிப்பு காரணமாக ஜொகூர் சிம்பாங் ரெங்காமில் உள்ள கம்போங் இப்ராஹிம் மஜித் மற்றும் பண்டார் பாரு இப்ராஹிம் மஜித்தில் PKPD ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்படும்.
கோவிட்-19 பாதிப்பின் விளைவாக ஏப்ரல் 28 வரை மஸ்ஜித் இந்தியாவில் உள்ள மெனாரா சிட்டி ஒன் காண்டோமினியம், மலையன் மேன்ஷன் மற்றும் சிலாங்கூர் மேன்ஷனில் PKPD-யை அரசாங்கம் நீட்டிக்கும் என்றும் இஸ்மாயில் கூறினார்.