கோவிட்-19: 150 புதிய பாதிப்புகள், 5 இறப்புகள், 202 பேர் குணமடைந்துள்ளனர்

202 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது மனநிறைவளிக்கிறது.

“இன்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது” என்று இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நண்பகல் வரை 150 புதிய கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இன்றுவரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,987 என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மேலும் ஐந்து கோவிட்-19 நோயாளிகள் இறந்து விட்டதாகவும், இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மொத்தம் 2,427 கோவிட்-19 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர், என்றார்.

இவர்களில், 60 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 33 நோயாளிகளுக்கு சுவாச சிகிச்சை தேவைப்படுகிறது.

இன்று அறிவிக்கப்பட்ட ஐந்து மரணங்கள்:

‘நோயாளி 4,532’ (78-வது இறப்பு)

மலேசிய நாட்டவர் அல்லாத, அடையாளம் தெரியாத ஆண் ஒருவர், ஏப்ரல் 6, 2020 அன்று சபாவின் கோத்தா கினாபாலுவில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையின் போது பெறப்பட்ட மாதிரி சோதனை முடிவுகள் நேர்மறையான கோவிட்-19 பாதிப்பை காட்டியுள்ளது. இந்த வழக்கு போலிஸ் விசாரணையில் உள்ளது.

‘நோயாளி 2,052’ (79-வது இறப்பு)

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் வரலாறு கொண்ட 65 வயதான மலேசிய நபர். மார்ச் 27 அன்று சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 5.17 மணியளவில் இறந்துவிட்டார்.

‘நோயாளி 4,818’ (80-வது இறப்பு)

இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் வரலாறு கொண்ட 63 வயதான மலேசிய நபர். ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 11.36 மணியளவில் இறந்துவிட்டார்.

‘நோயாளி 4,521’ (81-வது இறப்பு)

சிறுநீரக நோயின் வரலாறு கொண்ட 74 வயதான மலேசிய பெண். செரி பெட்டாலிங்கில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவிட்-19 ‘நோயாளி 4088’ உடன் நெருங்கிய தொடர்பு வரலாற்றை கொண்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 13 மாலை 4.20 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

‘நோயாளி 1,649’ (82-வது இறப்பு)

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 81 வயதான மலேசிய நபர். செரி பெட்டாலிங்கில் நடந்த தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோவிட்-19 ‘நோயாளி 343’ உடன் நெருங்கிய தொடர்பு வரலாற்றை கொண்டுள்ளார். மார்ச் 26 அன்று ஜோகூரில் உள்ள எஞ்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை 11.50 மணியளவில் இறந்துவிட்டார்.