நெகிரி செம்பிலானில் உள்ள செண்டாயான் பகுதியில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் புதிய கிளஸ்டரை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. இதில் இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“செண்டாயானில் ஒரு பரவல் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். எங்கள் அதிகாரிகளால் அங்கு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது”.
“அதை கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நூர் ஹிஷாம் கருத்துப்படி, இப்பகுதியில் கோவிட்-19க்கு சாதகமானவர்களில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 உறுப்பினர்களும், 13 தஃபிஸ் மாணவர்களும் உள்ளனர் என்றார்.
சுகாதார அமைச்சால் அடையாளம் காணப்பட்ட 28 கிளஸ்டர்கள் மற்றும் துணை கிளஸ்டர்களில், செண்டாயான் கிளஸ்டரும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இது நேற்று அவர் அறிவித்த 25 கிளஸ்டர்கள் மற்றும் துணை கிளஸ்டர்களின் அதிகரிப்பை காட்டுகிறது.