1MDB நிதியின் மீட்கப்பட்ட RM1.3 பில்லியனை மலேசியாவுக்கு திருப்பித் தருகிறது அமெரிக்கா

மீட்டெடுக்கப்பட்ட 1MDB நிதியின் மேலும் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை (DOJ) .

பிரதம மந்திரி முகிதீன் யாசின் கூற்றுப்படி, DOJ-யின் சொத்து மீட்பு முயற்சியில் இதுவரை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட மொத்த நிதி 620 மில்லியன் அமெரிக்க டாலர் (RM2.69 பில்லியன்) ஆகும்.

“இந்த மிக சமீபத்திய 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை உள்ளடக்கி, மொத்தம் 620 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான 1MDB பணம் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறித்து மலேசிய அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது,” என்று முகிதீன் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மலேசியாவிலிருந்து தப்பியோடிய ஜோ லோ, (முழுப்பெயர் லோ டேக் ஜோ), மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த அக்டோபரில் DOJ உடன் ஒரு வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தத்தை எட்டிய பின் இந்த மீட்புகள் ஏற்பட்டுள்ளன. 1MDB-யில் இணைக்கப்பட்ட நிதிகளில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மலேசிய நிதியத்திலிருந்து பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி ஜோ லோ வாங்கிய சொத்துக்களுக்கு எதிராக DOJ ஏராளமான பறிமுதல் கோரல்களை தாக்கல் செய்தது.

முந்தைய பறிமுதல் வழக்குகளுடன் சேர்த்து, இதுவரை, 1MDB உடன் தொடர்புடைய சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை மீட்டுள்ளதாக DOJ கூறியது.

முகிதீன் இன்று, அந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள், பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விற்கப்பட்ட சில சொத்துக்களின் மூலமாகவும், தப்பியோடிய நபருடன் தொடர்புடையவர்களுடன் இணைக்கப்பட்ட சொத்துக்களும் அடங்கும் என்றார்.

“300 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பித் தர உதவியதற்கும் ஒத்துழைப்பிற்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை செயல்பாட்டில் ஈடுபட்ட மலேசியாவின் நிதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலின் பங்கையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.”

இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, சமீபத்திய நிதி, மலேசியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டது என்று அறிவித்துள்ளது.

“மலேசிய மக்களுக்காக, இந்த படுமோசமான திட்டம் தொடர்பாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை வேட்டையாட, பறிமுதல் செய்ய, மற்றும் திரும்பப் பெறுவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த கட்டணம் பிரதிபலிக்கிறது” என்று DOJ-வின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டர்னி ஜெனரல் பிரையன் ஏ பென்ஸ்கோவ்ஸ்கி தெர்ரிவித்துள்ளதாக அறிக்கையில் சொல்லப்பட்டாது.

மீட்கப்பட்ட சொத்துகளில் பெவர்லி ஹில்ஸ், நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள உயர்தர ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் ஜோ லோ செய்த மில்லியன் டாலர்கள் மதிப்புடைய வணிக முதலீடுகள் ஆகியவை அடங்கும்.

1MDB நிதியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை (RM19.5 பில்லியன்) 2009 மற்றும் 2015க்கும் இடையில் மலேசிய உயர் மட்ட நிதி அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் – லோ உட்பட – முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக DOJ மதிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பினாங்கில் பிறந்த ஜோ லோ மீது மலேசியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆளில்லா நிலையில் அல்லது நேரில் வரா நிலையில் (charged in absentia) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1MDB ஊழலின் பின்னணியில் தான் குற்றமற்றவர் என்று கூறப்படுவது உட்பட எல்லா குற்றச்சாட்டுகளையும் ஜோ லோ மறுத்துள்ளார். அப்போதைய டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான ஹராப்பான் அரசாங்கத்தின் அரசியல் துன்புறுத்தல் என்று கூறி, அவர் விசாரணையை எதிர்கொள்ள மலேசியா திரும்பவும் மறுத்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1MDB தொடர்பாக பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

வரலாற்றில் மிகப்பெரிய உலகளாவிய நிதி முறைகேடுகளில் ஒன்று என அழைக்கப்படும் இந்த ஊழல், பல நாடுகளில் உள்ள வங்கி நிறுவனங்கள் மூலமாகவும், கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம், இன்க். வங்கி நிறுவனம் மூலமாகவும் பண மோசடி செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.

இந்த ஊழலில் அதன் முன்னாள் ஆசிய தலைமை நிர்வாக அதிகாரி டிம் லெய்ஸ்னர் உள்ளிட்ட வங்கியாளர்களின் பங்கு குறித்து கோல்ட்மேன் சாச்ஸ் கடந்த ஆண்டு மலேசியாவிடம் மன்னிப்பு கேட்டது.