HRDF-இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஷாஹுல் ஹமீத் நியமிக்கப்படுகிறார்

My Events International-லின் நிறுவனர் ஷாஹுல் ஹமீத் தாவூத், மனித வள மேம்பாட்டு நிதியத்தின் (HRDF) தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷாஹுல் ஹமீத்தின் நியமனம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வரும் என்பது தெரிகிறது. கடந்த மாதம், மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணனால் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இளஞ்செழியன் வேணுகோபாலுக்கு பதிலாக அவர் நியமிக்கப்படுவார்.

இதற்கிடையில், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ஷாஹுல் ஹமீத் இப்போது கருத்து தெரிவிக்க மறுத்து, தனது நியமனம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முதலில் மனிதவள மேம்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் உட்பட பல வர்த்தக குழுக்கள் மற்றும் தனிநபர்கள், இன்று ஷாஹுல் ஹமீத்தை வாழ்த்தியுள்ளனர்.

இருப்பினும், My Events International, 2016-ஆம் ஆண்டில் டாக்டர் ஜாகிர் நாயக்கைக் கொண்ட தொடர் சொற்பொழிவுகள் உட்பட பல உயர்தர நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததில் ஈடுபட்டது என்று சிலர் கூறியுள்ளனர்.

அந்நேரத்தில், ஜாகிர் நாயக் மலாக்காவில் சொற்பொழிவாற்ற, ஷாஹுல் ஹமீத் அப்போதைய மலேசிய காவல்துறைத் தலைவர் காலித் அபு பக்கார் உட்பட பல உயர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டதாக தெரிகிறது.

டாக்டர் ஜாகிர் நாயக்கைக் பின்பற்றுபவர் ஷாஹுல் ஹமீத் என்று வர்ணித்த விமர்சகர்கள், அவரை மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி.எப் (HRDF) எனப்படும் மனித வள மேம்பாட்டு நிதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ள சரவணனின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

சரவணன், ம.இ.கா.-வின் துணைத் தலைவராக உள்ளார். இந்திய அரசாங்கத்தால் கோரப்படும் ஜாகீர், மலேசியாவில் இருப்பதை அக்கட்சி தொடர்ந்து எதிர்த்துள்ளது.

ஏப்ரல் 1 ம் தேதி, மலாய் மெயில் போர்டல், இளஞ்செழியன் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் நூர் ஃபரிடா அரிஃபின் மற்றும் நான்கு வாரிய உறுப்பினர்களையும் மனிதவள அமைச்சு தங்கள் சேவை ஒப்பந்தத்தில் இருந்து நிறுத்தியதாக அறிவித்தது.