மே 18 அன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வு வழக்கம் போல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோப் தெரிவித்தார்.
இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, அனைத்து ஊடகங்களும் நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று ஆரிஃப் கூறினார்.
“நீங்கள் நேரடி ஒளிபரப்பை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும். ஆனால் ஆர்.டி.எம் மற்றும் பெர்னாமா அங்கு இருக்கும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று, துணை சபாநாயகர் முகமட் ரஷீத் ஹஸ்னோன், நாடாளுமன்றத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
எம்.பி.க்கள் ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர்வார்கள் என்று ஆரிஃப் கூறினார்.
இதற்கிடையில், அவருக்கு பதிலாக ஒரு புதிய சபாநாயகரை நியமிக்க தேசிய கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
“என் தரப்பில் எந்தக் கருத்தும் இல்லை. கூட்டத்தின் விதிகளையும் மத்திய அரசியலமைப்பு சட்டத்தையும் மட்டுமே நான் பின்பற்றுகிறேன்” என்று அந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.
நாடாளுமன்றம் கடைசியாக டிசம்பர் 5 அன்று கூடியது. இது முதலில் மார்ச் 9 ஆம் தேதி அன்று அமர திட்டமிடப்பட்டது, ஆனால் பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.