உணவின்றி இறந்தாரா முதியவர்?

கடந்த திங்களன்று பகாங்கின் கோலா லிப்பிஸில் ஒரு வயதான முதியவரை சாலையோரத்தில் இருந்து மீட்டு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய காவல்துறையின் முயற்சி துயரத்தில் முடிந்துள்ளது.

கோலா லிப்பிஸ் காவல்துறைத் தலைவர் முகமட் ராஸிஸ் முகமட் வாஹித், நேற்று அந்த 74 வயதான நபரின் நிலை குறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அங்கு சென்ற அதிகாரிகள் அம்முதியவர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.

“நேற்று காலை, நான் என் ஆட்களை சென்று பார்த்துவரச் சொன்னேன். அவரது வீடு டுரியான் தோட்டத்தில் உள்ளது. அங்கு சென்று அவரை கூப்பிட்ட போது, யாரும் பதிலளிக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, அவர் இறந்து கிடந்ததைக் கண்டனர்.”

“ஒருவேளை அவர் தண்ணீர் எடுக்க சென்றிருக்கலாம். ஏனென்றால் அவர் தண்ணீர் குடிக்கும் இடத்தில் தான் இறந்துகிடந்தார்”.

அவருடைய குடிசையில் ஒரு சமையலறை, 10×10 என்ற ஒரு சிறிய படுக்கை மட்டும் இருந்தது. அதை வீடு என்று அழைக்க முடியாது. குடிசை என்றே அழைக்க முடியும். அந்த பகுதியில் தண்ணீர் இல்லை, மின்சாரமும் இல்லை,” என்றார்.

முகமட் ராஸிஸின் கூற்றுப்படி, அம்முதியவர் தனியாக வசித்து வந்ததாக நம்பப்படுவதாகவும், அவருக்கு குழந்தைகள் மற்றும் மனைவி இல்லை என்றும் தெரிகிறது.

திங்களன்று, காவல்துறையினர் கோலா லிப்பிஸில் ஒரு முதியோருக்கு உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வலம் வந்தது.

ஒரு முதியவர் சாலையோரத்தில் கிடப்பதைக் கண்டதாகவும், அவருக்கு உதவியதாகவும் அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் பட்டறை உரிமையாளர் சே அமிரஸ் சியாபிக் கூறினார்.

பல நாட்களாக உணவு இல்லாமல் இருந்ததாகவும், உணவுக்காக வெளியே செல்ல வேண்டியதாகவும் அம்முதியவர் சொன்னதாக அவர் கூறினார்.

சே அமிரஸ் பின்னர் அவருக்கு சில ரொட்டிகளை வாங்கித் தந்ததாகவும், பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரைப்பற்றி தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முகமட் ராஸிஸ், அவரும் அவரது உறுப்பினர்களும், அம்முதியவர் உணவு வாங்குவதற்காக சாலையோரத்தில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டதாகக் கூறினார்.

“நானும் பல (போலீஸ்) உறுப்பினர்களும் திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் அவரை மீட்க வந்தோம். அவர் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சாலையில் அமர்ந்திருப்பதைக் கண்டோம்”.

“அவரிடம் கேட்ட போது, அவர் சோர்வாக இருப்பதாகவும், நோய் ஏதும் இல்லை என்றும் சொன்னார். அவர் உணவு வாங்க கால்நடையாக வெளியே வந்துள்ளார்”.

“எனவே நாங்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி, அவருக்கு கொஞ்சம் அரிசி, மேகி, 1 பெட்டி மினரல் வாட்டர் வாங்கித் தந்தோம்,” என்று அவர் கூறினார். காவல்திறையினர் பின் அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.