1MDB நிதி: முகிதீனின் அரசு வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும்

பிரதம மந்திரி முகிதீன் யாசினும் அவரது அரசாங்கமும் அமெரிக்க நீதித்துறை (DOJ) திருப்பி அனுப்பியுள்ள RM1.3 பில்லியன் 1MDB நிதியை கையாள்வதில் அதன் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று C4 ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்க்கும் மையம் (சி4)/Centre to Combat Corruption and Cronyism (C4), பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் மக்களால் தேர்வு செய்யப்படாத அரசாங்கம் என்றும், மக்களால் தூக்கி எறியப்பட்ட 1MDB ஊழலில் ஈடுபட்டவர்களே அதில் உள்ளனர் என்றும் கூறியுள்ளது.

“இதை கருத்தில் கொண்டு, மலேசியர்களான நாம் இந்த உண்மையுடன் வாழ வேண்டியுள்ளது. இதில் கடுமையான நம்பிக்கை துரோகம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது”.

“ஆகவே, முகிதீனும் அவரது அமைச்சரவையும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையைக் காண்பிப்பது கட்டாயமாகும்” என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திரும்பிய நிதி எங்கு (டெப்பாசிட் செய்து) வைக்கப்படும், முந்தைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தால் திட்டமிட்டபடி அது ஒரு அறக்கட்டளை நிதியாக (trust fund) இருக்குமா என்ற கேள்விகள் உள்ளன.

1MDB நிதியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலரை (RM19.5 பில்லியன்) 2009 மற்றும் 2015க்கும் இடையில் மலேசிய உயர் மட்ட நிதி அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் – ஜோ லோ உட்பட – முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக DOJ மதிப்பிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1MDB தொடர்பாக பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

1 எம்.டி.பி ஊழல் தொடர்பாக நஜிப்பிற்கு எதிரான விசாரணையில் பெரிக்காத்தான் அரசாங்கம் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஏ கதிர் ஜாசின் கூறியுள்ளார்.

“அமெரிக்காவிலிருந்து RM1.3 பில்லியனைத் திரும்பப் பெற்ற மகிழ்ச்சியில், நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை மறந்துவிடாதீர்கள்”.
“நாம் மறந்து, திசைதிரும்பிவிட்டால், மீண்டும் ஏமாற்றப்படலாம்” என்று அவர் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறினார்.