மூங்கில் உற்பத்தி திட்டம்: இறுதியாக அதன் முக்கியத்துவத்தை கைருதீன் உணர்ந்துள்ளார் – தெரசா கோக்

முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை விமர்சித்திருந்தாலும், மூலத் தொழில் அமைச்சர் கைருதீன் அமன் ரசாலி இப்போது மூங்கில் உற்பத்தி திட்டத்தை தொடர்வது குறித்து முன்னாள் அமைச்சர் தெரசா கோக் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“நானும் மலேசிய மர தொழில் வாரியமும் (எம்.டி.ஐ.பி)/Lembaga Industri Kayu Malaysia (MTIB) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூங்கில் உற்பத்தியின் கொள்கையையும் வழிநடத்துதலையும் இப்போது கைருதீன் தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”.

“மூங்கில் நடவு திட்டம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல், கடந்த ஆண்டு (மார்ச் 3, 2019) இந்த திட்டம் குறித்த தனது அறிக்கையில் சாடியது முட்டாள்தனமானது என்பதை புதிய அமைச்சர் உணர்ந்துள்ளார் என்று நான் நம்புகிறேன்” என்று நேற்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் தெரசா தெரிவித்தார்.

உத்துசான் மலேசியாவில் “பாமாயிலை மறந்து விடுங்கள், மூங்கில் நடுங்கள்” என்ற தலைப்பிலான அறிக்கையும் திரிக்கப்பட்டதாக தெரசா கூறினார்.

கைருதீனுக்கு இந்த விஷயம் பற்றி தெரியாது என்று அவர் கூறினார்.

பெருமளவில் மூங்கில் விளைச்சல் செய்யும்படி தெரசா வழங்கிய யோசனை குறித்து மார்ச் 3, 2019 அன்று, கைருதீன் தனது பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கைருதீன், செம்பனை எண்ணெய் விலையின் வீழ்ச்சியைக் கையாள்வதில் தோல்வியுற்றதில் உள்ள பலவீனங்களை மறைக்கவே மூங்கில் நடவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் என்று விவரித்திருந்தார்.

12-வது மலேசியா திட்டத்தில் மூங்கில் தொழிலின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று மூலத் தொழில் அமைச்சு (கே.பி.பி.கே) நேற்று வலியுறுத்தியது.

கைருதீன் ஒரு ஊடக அறிக்கையில், மூங்கில் பொருட்களுக்கான உலகளாவிய சந்தை அளவு 2018இல் 68 பில்லியன் அமெரிக்க டாலர் (RM295 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இருப்பினும், நாட்டின் மூங்கில் தொழிலின் ஏற்றுமதி பங்களிப்பு 2019ஆம் ஆண்டில் சுமார் RM9 மில்லியனாக, குறைவாக இருந்தது என்றார்.

“எனவே, மூங்கில் உற்பத்தி தொழில் நாட்டில் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு பெரும் சாத்தியங்களும் ஆற்றலும் உள்ளது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மூங்கில் உற்பத்தி தொழில் குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்க கைருதீனுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ உதவ தயாராக இருப்பதாக தெரசா கூறினார்.

“கைருதீன் தனது அமைச்சின் கீழ் மூங்கில் உற்பத்தி அல்லது மற்ற பிரச்சினைகளை கையாள்வது குறித்து எனது கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற விரும்பினால், நான் உதவ தயாராக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.