கோவிட்-19: டாக்டர் நூர் ஹிஷாம் உலகின் சிறந்த 3 மருத்துவர்களில் ஒருவர் – சீன தொலைக்காட்சி

பொது சுகாதாரத் துறையிலிருந்து கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் உலகின் சிறந்த முதல் மூன்று மருத்துவர்களில் ஒருவராக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை பட்டியலிட்டுள்ளது சீனா குளோபல் டிவி நெட்வொர்க் (சிஜிடிஎன்)/China Global TV Network (CGTN). அமெரிக்காவின் டாக்டர் அந்தோனி ஃபாசி (Dr Anthony Fauci) மற்றும் நியூசிலாந்தின் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட் (Ashley Bloomfield) ஆகியோருடன், டாக்டர் நூர் ஹிஷாமும் ஒருவர் என்று சிஜிடிஎன் புகழ்ந்துள்ளது.

மலேசியாவில் COVID-19 பாதிப்பை கையாளும் அவரது நேரடியான மற்றும் அமைதியான அணுகுமுறையைப் பாராட்டி டாக்டர் நூர் ஹிஷாம் உலகின் சிறந்த மருத்துவர்களில் ஒருவராக “முடிசூட்டப்பட்டதாக” சிஜிடிஎன் நேற்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

சிஜிடிஎன் கருத்துப்படி, டாக்டர் நூர் ஹிஷாம், 56, மற்றும் அவ்விரண்டு நபர்களையும் இதற்கு முன் பலரும் அறிந்திருக்கவில்லை என்றும், ஆனால் அவர்கள் இப்போது தங்கள் நாட்டில் தொற்றுநோய்க்கான தகவல் மற்றும் உண்மைகளின் மிகவும் நம்பகமான ஆதாரமாக உள்ளனர், என்றும் கூறியுள்ளது.

“சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும், எனக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர் பல மலேசியர்களின் புகலிடமாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் மாறியுள்ளார்”, என்று உள்ளூர் பத்திரிக்கையாளர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது சிஜிடிஎன். அதோடு, டாக்டர் நூர் ஹிஷாம் நம்பகமான முகத்தையும் கொண்டிருக்கிறார்” என்றது.

சிஜிடிஎன் கூற்றுபடி, 79 வயதான டாக்டர் அந்தோனி ஃபாசி (Dr Anthony Fauci), அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் (என்ஐஏடி) இயக்குநராகவும், ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட் (Ashley Bloomfield) 54, நியூசிலாந்தில் சுகாதார இயக்குநர் ஜெனரலாகவும் உள்ளார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் ஆதாம் பாபாவும் டாக்டர் நூர் ஹிஷாமிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஆதாம் தனது முகநூலில் சமீபத்தில் பதிவேற்றியதில் கூறியதாவது: “கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் உலகின் மூன்று சிறந்த மருத்துவர்களில் ஒருவராக சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கால் சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்களை அங்கீகரித்துள்ளது மலேசிய மருத்துவத் துறைக்கு கிடைத்த ஒரு பெரிய மரியாதை.”