பல வாரங்களாக கடலில் மிதந்து, மலேசியாவை அடையத் தவறிய படகு மூழ்கியதில் குறைந்தது 20 ரோஹிங்கியா இனத்தவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டினியால் பாதிக்கப்பட்ட சுமார் 382 ரோஹிங்கியாக்கள் காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர் என்று பங்களாதேஷ் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறினார்.
மியான்மரில் இருந்து இஸ்லாமிய சிறுபான்மையினரான ரோஹிங்கியா இனக்குழுவை ஏற்றிச் செல்லும் அதிகமான படகுகள் கடலில் இருக்கின்றன என்று நம்புவதாக ஒரு மனித உரிமைக் குழு கூறியுள்ளது. மலேசியா மற்றும் தாய்லாந்தில் கொரோனா கிருமி தொற்றுநோய் பாதிப்பால், அவர்கள் அங்கு பாதுகாப்பு கோருவது மேலும் கடினமாகியுள்ளது.
இந்தப் படகு, புதன்கிழமை அன்று கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பங்களாதேஷ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
“அவர்கள் சுமார் இரண்டு மாதங்கள் கடலில் இருந்துள்ளனர். பட்டினியால் தவித்துள்ளனர்,” என்று கடற்கரை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
தப்பிய 382 பேரும் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
வீடியோ காட்சிகள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காட்டியுள்ளன. சிலர் மிகவும் ஒல்லியாகவும், நடக்க முடியாமலும், கடற்கரைக்கு வருவதற்கும் உதவ வேண்டியிருந்ததை காட்டியது. மலேசியாவால் மூன்று முறை திரும்பிச் செல்லுமாறு சொல்லப்பட்டதாக ஒரு அகதி செய்தியாளர்களிடம் கூறினார்.
மியான்மரின் பெரும்பான்மையான பெளத்தர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் துன்புறுத்தப்படுவதாகவும் ரோஹிங்கியா இனக்குழுக்கள் கூறுகின்றனர். ரோஹிங்கியா சமூகத்தை தவறாக நடத்திய குற்றச்சாட்டுகளை மியான்மர் மறுத்துள்ள போதிலும், ரோஹிங்கியாக்கள் நாட்டின் பூர்வ குடியினர் அல்ல என்றும், அவர்கள் தெற்காசியாவிலிருந்து குடிபெயர்ந்ததாகவும் கூறுகின்றனர்.
தெற்கு பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா இனக்குழுக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் 2017-ல் எழுச்சியில் கடுமையான இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பல ஆண்டுகளாக ரோஹிங்கியா இனக்குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் தஞ்சம் அடைவார்கள் என்ற நம்பிக்கையில் கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். கப்பல்கள் பொதுவாக நவம்பர் முதல் மார்ச் வரை வறண்ட காலங்களில், கடல் மட்டம் அமைதியாக இருக்கும் போது பயணிக்க முயல்கின்றன.