சீனா குளோபல் டிவி நெட்வொர்க் (சிஜிடிஎன்)/China Global TV Network (CGTN) தனக்கு அளித்த பாராட்டுகளை, கோவிட்-19 பாதிப்பை சமாளிப்பதற்கான நாட்டின் கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு என்று விவரித்துள்ளார் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
“இந்த அங்கீகாரம் எனது வேலைக்கு கிடைத்தது அல்ல. இது நாட்டிற்கானது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமெரிக்காவின் டாக்டர் அந்தோனி ஃபாசி (Dr Anthony Fauci) மற்றும் நியூசிலாந்தின் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட் (Ashley Bloomfield) ஆகியோருடன், டாக்டர் நூர் ஹிஷாமும் உலகின் சிறந்த 3 மருத்துவர்களில் ஒருவர் என்று சிஜிடிஎன் புகழ்ந்துள்ளது பற்றி கேட்டபோது நூர் ஹிஷாம் இதைக் கூறினார்.
அந்தந்த நாடுகளில் கோவிட்-19 பாதிப்பைக் கையாள்வதில் இம்மூன்று நபர்களின் தெளிவான மற்றும் அமைதியான அணுகுமுறையை சிஜிடிஎன் பாராட்டியது.
இதற்கிடையில், கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்றும் சுகாதார அதிகாரிகள், காவல்துறை, இராணுவ வீரர்கள், குடிவரவு அதிகாரிகள் உட்பட – அனைத்து முன்னணி வீரர்களுக்கும் இந்த பாராட்டு சொந்தமானது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை வெற்றி பெற செய்ய உதவும் மற்ற இரண்டு முக்கிய குழுக்களும் உள்ளன, அதாவது எல்லைக் கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் என்றும் அவர் கூறினார்.
எனவே, சிஜிடிஎன்-னின் பாராட்டு முழு நாட்டிற்கும் சொந்தமானது என்று தான் நம்புவதாக அவர் வலியுறுத்தினார்.
“முக்கியமான விஷயம் என்னவென்றால், சுகாதார அமைச்சு (MOH) மற்றவர்களுடன் இணைந்து, ஒரு குழுவாக செயல்படுகிறது”.
“எடுத்துக்காட்டாக, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு போல, அதை நாங்கள் அறிவுறுத்துகிறோம், முடிவை பிரதமர் எடுக்கிறார், நான் அல்ல,” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றிய அமைச்சகங்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் நூர் ஹிஷாம் நன்றி தெரிவித்தார்.