கோவிட்-19: புதிய பாதிப்புகள் 69 மட்டுமே!

மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று 69 பாதிப்புகள் என மிகக் குறைவான கோவிட்-19 தினசரி பாதிப்புகளை பதிவாக்கி மலேசியா மீண்டும் சாதகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

குணமடைந்த மொத்த தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 201 ஆகும். இது இன்று பதிவு செய்யப்பட்டுள்ள புதிய பாதிப்புகளை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 201 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும், இது கோவிட்-19-ல் இருந்து முழுமையாக குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,967, அல்லது 56.5 சதவீதம் என்றும் கூறினார்.

அவர், குணமடைந்த நோயாளிகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போது மருத்துவமனையில் செயலில் உள்ள பாதிப்புகள் 2,198 ஆகும் என்றார்.

“51 கோவிட்-19 நேர்மறை நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 26 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது” என்று நூர் ஹிஷாம் புத்ராஜெயாவில் இன்று சுகாதார அமைச்சின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இன்று மதியம் நிலவரப்படி, மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மலேசியாவில் பாதிப்புகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 86 ஆக கொண்டு வந்துள்ளது அல்லது மொத்த பாதிப்புகளில் இது 1.64 சதவீதம் ஆகும்.

85-வது இறப்பு, 85 வயதான மலேசிய நபர் (‘நோயாளி 5,064’). இவர், பாலி PUI கிளஸ்டர் தொடர்பான கோவிட்-19 நேர்மறை ‘நோயாளி 4,657’ உடன் நெருங்கிய தொடர்பு வரலாற்றைக் கொண்டிருந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், முன்னதாக ஒரு தனியார் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 15 ஆம் தேதி தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இறந்து விட்டார்.

இதற்கிடையில், 86-வது இறப்பு (‘நோயாளி 5,183’) ஒரு மலேசிய நபர், பிற வியாதிகளின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இவர், ‘நோயாளி 2,321’ உடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஏப்ரல் 1 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற இவர், நேற்று இரவு 8.56 மணிக்கு இறந்து விட்டார்.