திறப்பதா இல்லையா? பட்டறைகள் மற்றும் பாரம்பரிய மருந்துக் கடைகளின் குழப்பம்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது விலக்கு வழங்கப்பட்ட போதிலும், பெரும்பாலான வாகன பட்டறை நடத்துனர்கள் கடையைத் திறக்க இன்னும் தயாராக இல்லை என்றே தெரிகிறது.

தங்கள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கோவிட்-19 சிகிச்சை செலவுகளை முதலாளிகள் ஏற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் வழியுறுத்தலினால் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மலேசிய கார் பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோர் காங் சியா

“சில உறுப்பினர்கள் (முதலாளிகள்) ஒரு மாத வருமானத்தை இழந்துள்ளனர். அவர்களின் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், செலவு நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டாக இருக்கும். அவர்களால் அதை எப்படி ஏற்க முடியும்?”

“நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களிடமிருந்து (முதலாளிகள்) கருத்துக்களைப் பெறுகிறோம். பலர் நிதி பாதிப்புக்கு பயந்து, விதிவிலக்கு கேட்க பயப்படுகிறார்கள்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கோர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது பலர் வீட்டில் இருப்பதால் வருவாய் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலக்கை விண்ணப்பிக்க மறுத்த சில உறுப்பினர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விரைவில் முடிவடையும் என்று நம்புகிற சில பட்டறை நடத்துனர்கள், இந்த கடினமான விதிமுறை கொண்ட விலக்குக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறார்கள்.

மேலும், பட்டறைக்கு கிருமிநாசினி சேவைகள் மேற்கொள்ள ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகள் செலவாகும் என்று நம்புவதாகவும், இதற்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்றும் கோர் பரிந்துரைத்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து வணிக வளாகங்களிலும் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமிநாசினி நடவடிக்கைகளை மேற்கொள்ள புத்ராஜெயா உத்தரவிட்டுள்ளது.

பாரம்பரிய மருந்துக் கடை

பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர்களும் செயல்பட அனுமதிக்கப்பட்ட வணிக பட்டியலில் உள்ளனர். இருப்பினும், MITI விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தங்களுக்கு கடினமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

“நோயாளிகளைத் தொடவோ அல்லது நெருக்கமாக தொடர்பு கொள்ளவோ எங்களுக்கு அனுமதி இல்லை. நோயாளி வலியில் இருக்கும்போதும், உதவி தேவைப்பட்டாலும் கூட, யாரும் உடன் வரவோ, இருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

“நாங்கள் முன் வரிசை பணியாளர்களாக கருதப்படவில்லை என்றாலும், நோயாளிகளின் வலியைக் குறைக்க நாங்களும் உதவுகிறோம். இந்த கால கட்டத்தில் எல்லோரும் மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை”.

“Miti-க்கு விண்ணப்பிக்கும் தேவை எங்களுக்கு பொருத்தமற்றது. ஏனெனில் எங்கள் சேவைகள் மற்றும் வேலை, சுகாதார அமைச்சின் (MOH) மேற்பார்வையில் உள்ளன.” என்றார்.

“உணவகங்கள் கிளினிக்குகள் போல பாரம்பரிய மருந்துக் கடைகளும் விண்ணப்பிக்கத் தேவையில்லை”.

பெரும்பாலான FCPAAM உறுப்பினர்கள் விலக்குகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அவர் கூறினார்.

“நானும் விலக்குகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. நான் வீட்டிலேயே இருக்க விரும்புகிறேன். விண்ணப்ப செயல்முறை மிகவும் கடினமானது,” என்றார்.

மற்ற விதிகள்

இந்த சங்கம் 5,000க்கும் மேற்பட்ட பாரம்பரிய சீன மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் ‘அக்குபஞ்சர்’ மருத்துவ நிபுணர்களைக் கொண்டுள்ளது.

இதனிடையே, பாரம்பரிய இந்திய மருத்துவ சங்கத்தின் (பெப்டிம்) தலைவர் எஸ்.ரகுபதி, தனது மருத்துவ பயிற்சியாளர்களுக்கு Miti-யின் விலக்கு விண்ணப்ப விதிமுறை குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விளக்கினார்.

அவரது மருத்துவ பயிற்சியாளர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கும் போது கூடல் இடைவெளியை கடைபிடிக்கின்றனர் என்றார்.