நாட்டில் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து இன்று 54 மட்டுமே பதிவாகியுள்ளன.
மொத்த பாதிப்புகள் இப்போது 5,305 ஆக உள்ளன.
இதற்கிடையில், இன்று 135 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,102 அல்லது மொத்த பாதிப்புகளில் 58.5 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது.
இன்று இரண்டு புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன:
87-வது இறப்பு (‘நோயாளி 2657’) 60 வயதான மலேசிய நபர். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் பின்னணி இருந்தது. அவர் மார்ச் 30, 2020 அன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஏப்ரல் 12, 2020 அன்று பிற்பகல் 3.20 மணிக்கு இறந்துவிட்டார்.
88-வது இறப்பு (‘நோயாளி 5252’) 36 வயதான மியான்மர் குடிமகன். அவர் ஏப்ரல் 17, 2020 அன்று கடுமையான சுவாச நோய்த்தொற்றுடன் (SARI) செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதே நாளில் காலை 10.00 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்று குறைந்த எண்ணிக்கையினால் கோவிட்-19 பாதிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தவறாக எண்ணிவிட வேண்டாம் என்று நூர் ஹிஷாம் இன்று தனது செய்தியாளர் கூட்டத்தில் எச்சரித்தார்.
மாறாக, அனைத்து தரப்பினரும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.