பாக்காத்தான் அரசு தப்லீக் கிளஸ்டரைத் தடுக்கத் தவறிவிட்டது – ஆதாம் பாபா

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலைக்கு காரணமாக இருந்த கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியின் தப்லீக் கூட்டத்தை பாக்காத்தான் அரசாங்கம் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா கூறினார்.

அதைக் குறைக்க முடிந்திருந்தால், மலேசியா ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை மட்டுமே எதிர்கொண்டிருந்திருக்கும் என்று ஆதாம் கூறினார்.

“மார்ச் 10 அன்று, முந்தைய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போன ஒரு புதிய தப்லீக் கிளஸ்டர் தோன்றியது.”

“இந்த ஸ்ரீ பெட்டாலிங் மசூதி கூட்டம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை நடந்துள்ளது. இது மிகப் பெரிய கிளஸ்டர். இன்றும் அதை எங்களால் (முற்றிலுமாக) தடுக்க முடியவில்லை. இந்த கிளஸ்டரின் பாதிப்புகள் ஐந்தாவது தலைமுறை வரை பரவியுள்ளன”.

பாக்காத்தான் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான திட்டம் பிப்ரவரி 23 அன்று தொடங்கியது.

பிப்ரவரி 24 முதல் 29 வரை மலேசியாவின் இடைக்கால பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது தலைமை தாங்கினார். அந்த காலகட்டத்தில் நாட்டிற்கு எந்த அரசாங்கமும் இல்லை.

பின்னர் எதிர்க்கட்சியுடன் கூட்டணியை உருவாக்கிய முகிதீன் யாசின் மார்ச் 1 ஆம் தேதி அன்று எட்டாவது பிரதமராக பதவியேற்றார்.

சுகாதார அமைச்சர் உட்பட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மார்ச் 10 அன்று பதவியேற்றது.

நேற்று பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமே சுந்தரம், அரசியல் நெருக்கடியும், கோவிட்-19 உடனான அதன் தொடர்பைப் பற்றியும் பேசியுள்ளார். கோவிட்-19ஐ கையாளும் முயற்சிகளில் நாடு “மூன்று வாரங்களை இழந்து” விட்டதாக அவர் கூறினார்.

“இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுகாதார அமைச்சு இந்த சோதனை பற்றி பேசத் தொடங்கியுள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் (மலேசியா) கோவிட் -19ஐ கட்டுப்படுத்துவதில் மிகவும் வேகமாக இருக்கிறோம்”.

“அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் தலைமைத்துவ பற்றாக்குறை காரணமாக நாம் குறைந்தது 3 வாரங்களை இழந்துள்ளோம். ஜனவரி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நாம் அடைந்த முன்னேற்றங்கள், அந்த 3 வாரங்களில் மறைந்துவிட்டன” என்று முன்னாள் பாக்காத்தான் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜோமோ கூறினார்.

தொற்றுநோய் குறித்து பல உலகத் தலைவர்களுடன் ஆதாம் மேற்கொண்ட தகவல் தொடர்புகளையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் செய்வது ஏற்கனவே உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்”.

“நான் உலக சுகாதார அமைப்புடன் (WHO) ஆலோசித்தேன். சீன, சிங்கப்பூர், ஆசியான் மற்றும் ஆசியான்+3 (தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா) அமைச்சர்களுடன் நேரடி ஒளிபரப்பில் கலந்து பேசியுள்ளேன்” என்று அவர் கூறினார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுடன் இணைந்து தலைமை வகித்து, சுகாதார அமைச்சின் சுமார் 270,000 முன்னணி பணியாளைர்களையும் கோவிட்-19-ஐ எதிர்கொள்ள தொடர்ந்து முன்னேற்றுவோம் என்றும் ஆதாம் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் விளைவாக மலேசியாவில் குணமடையும் விகிதம் 56 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.