நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து இவ்வருடம் நாடு முழுவதும் ரமலான் பஜார் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் தங்களின் வணிகத்தை தொடர அரசாங்கம் மாற்று வழி முயற்சிகளை வழங்கும் என்று சில வர்த்தகர்கள் நம்புகையில், சில வர்த்தகர்கள் சமூக ஊடகத்தில் தங்களின் பஜார் தளங்களைத் திறந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல ரமலான் பஜார் குழுக்கள் முகநூலில் (பேஸ்புக்கில்) திறக்கப்பட்டுள்ளன. திரங்கானு ஆன்லைன் ரமலான் பஜார் குழுவில் இப்போது 30,000 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல், மூவார் ரமலான் ஆன்லைன் பஜாரில் இப்போது 14,100 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த குழுக்கள் சமீபத்தில் (மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் தொடக்கத்தில்) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் தான் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், உறுப்பினர்களாக இருக்கும் வணிகர்கள் வரும் நோம்பு மாதத்தில் தங்களின் வியாபாரத்தைச் செய்ய உதவும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
முன்னதாக, சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசம், ரமலான் மாதத்தில் வர்த்தகர்கள் தங்கள் தொழிலைத் தொடர உதவும் வகையில், இ-ஹெயிலிங் முறையில் ரமலான் இ-பஜார்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தன.
இருப்பினும், ஏப்ரல் 16 ஆம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இ-ஹெயிலிங் உட்பட எந்தவொரு ரமலான் பஜாரும் சட்டவிரோதமானது என்று அறிவித்தார்.
இருப்பினும், மறுநாள் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி ரமலான் இ-பஜார் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார். இன்றுவரை அதன் நிலை இன்னும் நிச்சயமற்றே உள்ளது. சில வர்த்தகர்கள் இது குறித்து இன்னும் குழப்பத்தில் உள்ளனர்.